22 December 2011

மூன்று கால் முயல்

தெரியாதவ ன்/ள், முடியாதவ ன்/ள்
எனச் சீண்டும்போதுதான்
இந்த மூன்றுகால் முயல்
நான்குகால் பாய்ச்சலில்
நமக்குள் வந்துவிடுகின்றது.

சீண்டல்கள்
பிடித்தவர், பிடிக்காதவரென
யாரிடமிருந்து தூண்டப்பட்டாலும்
இந்த முயல்
நமக்குட் திரியத் தொடங்கிவிடும்.

தெரிந்தே, புரிந்தே
எதிர்க்கின்றோம்..,
எதற்கெனத்
தெரியாமல், புரியாமல்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
என்பது பிடிவாதம்...
இருந்துவிட்டுப் போகட்டும்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
ஆக்குவது வக்கிரம்...
வேண்டாமே...

வாழ்க்கைத் தேடலில்,
மூன்றுகால் முயல் முடிச்சுப்போடும்...

விஞ்ஞான, பிரபஞ்சத் தேடலில்
மூன்றுகால் முயல் முடிச்சவுக்கும்...

எதுவுமே உண்மைதான் பொய்யாகும்வரை...
எதுவுமே பொய்தான் உண்மையாகும்வரை...

(09.03.2011)

10 December 2011

அலைபேசி

எத்தனை மெதுவாய்ப் பேசினாலும்
விளங்கிக் கொள்வேன்...
எவ்வளவு சூடாகிப் போனாலும்
தாங்கிக் கொள்வேன்...

ஆனால்,
படுக்கைக்கு முன்
பல்துலக்கா உன்
ஈரமுத்தத்தைத் தான்
சகித்துக்கொள்ள முடியவில்லை...

உன் காதல் அவசரத்துக்காக
அவஸ்தைப்பட
நான் என்ன உன் காத லனா/லியா...

'இச்'சத்தத்தைக் காவிச்செல்லும்
'அலைபேசி'தானே என்ற அலட்சியத்தைத்
தயைசெய்து இன்றோடு நிறுத்திவிடு...


*****

நித்திரைக்கு முன்
அப்போதும் இப்போதும்
அணைக்கின்றேன்
அலைபேசியை...

அப்பொழுது
அவ ளை/னைத் தேடி..
இப்பொழுது
அதனைத் தேடாதிருக்க...

(06.04.2011)

08 December 2011

எனதாக, எனக்காக, ஏக்கம்...

பட்டுத் திருப்பித் தெறிக்கும் ஏக்கங்கள்...

நம் நாட்டிலிருந்தபோது
ஏக்கங்கள் இருந்தனதான்,
இந்நாடுகள் மீது...

வாழ வந்தபின்னர்,
பெற்றவை வசதிகளாக
இழந்தவை வாழ்க்கையாக
ஏக்கங்கள் வலிகளாகின்றன...

இந்த வாழ்க்கையை விரும்பியவர்களே,
இங்கு வாழ்க்கையைத் தேடுகின்றோம்...

வாழ்க்கை..,
நம் நாட்டில் ஏங்கிக் காத்திருக்கின்றது,
நமக்காக...


(06.04.2011)

06 December 2011

மென்மை

என் மனம்
கடினமானதுதான்...
அதனால்தானோ
நீ எனக்குள்
அழிய முடியாமல்
பதிந்துபோனாய்..!

உன் மனம்
மென்மையானதுதான்...
அதனால்தானோ
நான் உனக்குள்
பதிய முடியாமல்
அழிந்துபோனேன்..?


(2006)

28 November 2011

மனிதாபிமானம்

ஒருநாள்..,

வன்முறைகள் யாவும்
அடங்கிவிடும்...
அமானுஷ்ய அமைதி
எங்கும் நிலவும்...

மனித மனம்,
மனிதனைத் தேடி ஏங்கும்.

அன்று,
உலகம் மரணித்திருக்கும்...

அதன் சடலத்தில்
எஞ்சிநிற்கும் சில மனிதர்களிடையில்,
நாம் இன்று எதிர்பார்க்கும்,
மனிதாபிமானம்
அபரிமிதமாக விஞ்சி இருக்கும்...

(21.12.2009)

20 March 2011

பூக்கள்


இதழ்கள் இருக்கின்ற போதும்,
பேசமுடியாத பூக்கள்,
இதழ் விரிப்பதுதானே 
அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

அதையும் பறித்துவிடாதீர்கள்
பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

*****

பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
என்பது தெரியவில்லை...
ஆனால், 
பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
அழகுதான்...

*****

சொரியும் பூக்களின் அழகை ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...

(20.12.2010)

காதல்

இரு ஆத்மாக்களின்
மனச் சந்திப்பில்
உணர்வுகளின்
எழுச்சியில் உதிப்பது.

சோகத்திற்கும்
சுகானுபவத்திற்கும்
தனித்துவமாகிப்போன
துடிப்பு அது.

மௌனங்களின்
மொழி பெயர்ப்பில்
இசையும் கவிதை..,
காதல்...

நிசப்தத்தில்
உறைந்துபோகும்
இரவுகளில்..,
இருதயத்தின்
ஒரு ஓரத்தில்
எட்டிப்பார்க்கும்
நிலா... அது...

பார்வையில் ஒரு வீச்சு
சலனத்தில் ஒரு துளி
மௌனத்தில் ஒரு பேச்சு
இதயத்தில் ஒரு வலி
இவை தொடர்ந்த
ஒரு ஏகாந்தம்
காதல்...

மொத்தத்தில்,
சத்தமில்லாமல்
சரித்திரம் படைக்கும்
உயிர்க் காவியம்
காதலே..!

*****

காதலின் பிரசவம்
சிரிப்பினில் புரிவதில்லை.
அது
கண்ணீர்த் துளிகளிலேதான்
பிரசன்னமாகும்.

*****

நீ காதலித்திருந்தால்
உனது இதயத்துடிப்பின்
ஒலி
உனது காதுவரை
எதிரொலிக்கும்...
அப்பொழுது,
உனக்குள் சந்தோஷம்மட்டுமே
நர்த்தனமாடும்...
ஏனென்றால்,
உனது இதயம்
காதலுக்கு மட்டுமே
அர்ப்பணமாயிருக்கும்...

உனது காதல்
கல்லறைக்குள் அடங்கிப்போனால்
உனது உயிர்த்துடிப்பின்
வலி
நீ உள்ளளவும்
உன்னை வெறுக்கவைக்கும்...
ஏனெனில்,
உனது உயிர்
காதலில் மட்டுமே
உறைந்திருக்கும்.
அப்பொழுது,
உனது நினைவுகளுக்குள்
காதல் மட்டுமே
சமர்ப்பணமாயிருக்கும்...

*****

என் உயிரோடு வாசம் செய்பவளே
உன் இதழோர மௌனம்
என்னைக் கொல்லுதடி...
தளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே
விழி நீர் கூடத்
துளிர்க்க மறுக்கிறதே...

*****

வஞ்சியே!

உன்னை என்
இதயத் துடிப்பில் வைத்துத்
தாலாட்டுவேன்..,
அது துடிக்கும்வரையிலும்...

உன் நினைவுகளை
அதன் மிருதுவான தாளத்தில்
உறங்கவைப்பேன்..,
அது அதிரும்வரையிலும்...

*****

எனது கண்கள்
இமைப்பதைக் கூட
நான் அனுமதிப்பதில்லை...
அவை
உனது விம்பத்தைக்
கணப்பொழுது
என்னிடம் பிரிப்பதனால்...

*****

அழகே!

நீ என்னுள் கலந்த
நாள் முதலாய்
நான் நானாகவில்லை...
நீயாகவே
நான் மாறிவிட்டேன்...

(2000)

12 March 2011

உன்னால்

நம்பிக்கைகள்
உடைக்கப்பட்டது உன்னால்,
நம்பிக்கை தந்தது
நீ என்பதால்
உடைத்தாயோ..?

சந்தோஷம்
தகர்க்கப்பட்டது உன்னால்,
சந்தோஷம் தந்தது
நீ என்பதால்
தகர்த்தாயோ..?

ஆறுதல்
பறிக்கப்பட்டது உன்னால்,
ஆறுதல் தந்தது
நீ என்பதால்
பறித்தாயோ...?

இவ்வளவும்
எடுத்துவிட்டு
வாழச்சொன்னால்..,
நான் என்ன
கல்லறையா..,
பிணம் சுமக்க..?


(15.06.2007)

09 March 2011

கவிதை

வரிகள் செதுக்கும்,
உணர்வின் சிற்பம்...
மொழியின்,
அழகிய பிரசவம்...


சுகத்தில்,
தெறித்துச் சிதறுவது...
சோகத்தில்,
சிதறித் தெறிப்பது...


மோகத்தில்,
பதறிச் சிலிர்ப்பது... 
தாபத்தில்,
சிலிர்த்துப் பதறுவது...


மென்மையில்,
வன்மை சொல்லும்...
வன்மைக்குள்,
மென்மை தேடும்...


அடக்கும்போது,
அலறி வெடிக்கும்...
வருடும்போது,
கொஞ்சிக் குலவும்...


ஒப்பனையின் உச்ச மோகனம்...
கற்பனையின் வேக வாகனம்...
கவிதை..!


(22.09.2007)

21 February 2011

அவள் ஒரு மோகனம்

என் இதயத்தைக் கொள்ளை கொண்டவள்.
என் வார்த்தைகளுக்கு வெள்ளை அடித்தவள்.


என் நாயகி... அவள் பசும்பொன்...
பெயரிலே ஒரு கவர்ச்சி...
தேகமோ பெரும் மலர்ச்சி...
மெச்சினேன்.
அவள் உச்சிமோந்தாள்.

என் உடலெங்கும் மின்னதிர்ச்சி.
புது ஊற்றாய்ப் பொங்கியது மகிழ்ச்சி.

அவளின்
மிருந்தங்க அணைப்பில்
ஊமையன் என் உளறல்கூட
உன்னதமாய்ப் போனது.

அவள்
உச்சிமுதல் பாதம் வரைதான்
பார்த்துவிடத் துடித்தேன்...
ஆனால்,
இடையிலேயே பல்லாயிரம் விடயங்கள்...
தாண்ட முடியவில்லை...
இல்லை... முயலவில்லை...

அவளில் மூழ்கிப் பார்த்தேன்.
முற்றாக என்னை மறந்தேன்.
முழுவதும் உண்ணத் துடித்தேன்.
ஆகா..!
அவளொரு செந்தேன். மலைத்தேன்.
ஆனால்,
மறைக்க முடியவில்லை.

தினம் தினம் தொட்டுப் பார்த்தேன்.
தொடத்தொடப்
புதிய பரிமாணங்கள்...
மடியில் வைத்து மீட்டிப் பார்த்தேன்.
மீட்டமீட்டப்
புதிய ஸ்வரங்கள்...

என்னை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
தன் கருநிறக் கூந்தலில் முடிந்து கொண்டாள்.

முடிந்த பின்தான் தெரிந்தது,
அவள்..,
எனக்கு மட்டும் உரியவளல்ல
என்று...

அவளிற்
கலந்துபோன பலரோடு
நானும்
ஒருவனாகிப் போனேன்.

ஆனாலும் எனக்குக் கவலையில்லை.
ஏனெனில்,
அனைவருக்கும் அவளில் உரிமையுண்டு.

ஆம்..!
அவள் “தமிழ்மகள்”

(15.03.1998)