18 May 2012

வாழட்டும் உலகம்

வாழட்டும் உலகம்
என்றென்றும்
எம்மை
உள்ளிருத்திக்கொண்டு...

சிறுகச் சிறுகச் சிதைந்து
உக்காத எலும்புகள் ஆனதும்தானே
உள்ளாக்கப்பட்டோம் மண்ணுள்...

குவிந்து கிடந்த போதிலும்
ஒரு மிருகம்கூடக் குதறவில்லை,
அவையும் நம் கூடவே
குவிக்கப்பட்டுக் கிடந்ததால்...
ஆனால்,
அந்தக் குறையும் இருக்கவில்லை,
குதறிய மனித வெறியர்களால்...

கதறியபோது
நமது வலிகளைக்
கண்டுகொள்ளாத உலகம்,
குதறிய வடுக்களாய்
நம்மைக் கண்டபின்
பதறுகின்றது...

அணுகுண்டென்றால்
ஓரணியில் திரளும் உலகம்,
அணுவணுவாய் அழிக்கப்படுகையில்
எதிரணியிற்கூட ஏன் இல்லை...

அணுவால் அழிக்கப்பட்டிருக்கலாம்,
இப்படி
அணுவணுவாய் அழிக்கப்பட்டதிலும்...
வடுக்கள் தொடர்ந்திருந்தாலும்
வலிகள் சட்டென முடிந்திருக்கும்...

இப்படிக்குச்,
சடலங்களில் வீழ்த்தப்பட்டுச்
சடலங்களில் புதைக்கப்பட்டச்
சடலங்கள்...

இப்படி இதை எழுதியது,
இந்த வேதனைகளைப் பட்டறியாத
நாளைய சடலமொன்று...

21 April 2012

அழகைத் தேடி

அழகைத் தேடினேன்,
என் கன்னத்தோடு
ஈரத்தைப் பகிர்ந்துகொள்ள...

ஒரு விரல் தன்னும்
கிட்டவில்லை,
என் கன்னம்தாண்டியும்
கண்ணீர் தட்ட...

அழ கை தேடிய
என்னைப்பார்த்து
சிரிக்கின்றது
அழுகை...

15 February 2012

இது அழகான நினைவல்ல..! அழுத்தமான நிகழ்வு..!!

பயணங்களில் இன்னுமொரு பக்கமுண்டு. ஈழத்தமிழர் கூடுதலாக அனுபவித்திருக்கிறார்கள். இன்றும், அனுபவிக்கின்றார்கள். புலம்பெயரும் பயணத்தின்போது அனுபவிக்கும் இன்னல்கள், சொல்லில் வடிக்க முடியாதவை.

அப்படியொரு பயணத்தில், என் கண்முன்னே போயின இரு உயிர்கள்...
மொஸ்கோவிலிருந்து உக்ரேன் போகும் வழியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு இது...
பனி மூடிய நீர்ப்பரப்பில், நெஞ்சளவு நீரில், நீண்ட தூரம், நீண்ட நேரம், மறைக்குளிரில் நடந்தபோது வந்த வேதனை இது...

15 பெப்ரவரி 2002 இல்,அந்தத் துக்கநிகழ்வு நடந்தபின், குளிரின் விறைப்பினின்றும் ஓரளவு உடல்தேறி, ஒரு மாதத்தின் பின் எழுதியதை, மரணித்த அந்த உயிர்களுக்காகச் சமர்ப்பணம் செய்கின்றேன்...

இது அழகான நினைவல்ல..!
அழுத்தமான நிகழ்வு..!!
(15.02.2002 02:00-03:30)

காதலர் தினம்
தாண்டிய
அந்த நள்ளிரவு..,
இரு கல்லறைகள்
புதிதாய்ப் பூமியில்
எழுந்தன...
இதயத்தை
உடைத்துவிட்ட
அந்தக்
கறுப்பு நிமிஷங்களுக்கு..,
பனிக்குளிரும் காற்றும்
கட்டியம் கூறி
நின்றன...

அந்தக்
குளிர்மையின் உச்சத்திற்கு
முகம் கொடுக்க முடியாத
இரு ஆத்மாக்கள்..,
புத்துலகம் தேடிப்
பறந்து போயின...
கனவுகளும்
எதிர்பார்ப்புகளும்
அவர்களுக்கு
கானல் நீராகிப் போயின...

அன்புத் தோழர்களே..!
அப்பன், அன்பழகன்
என்ற நாமங்கள், இனி
யாரை
உரிமை கூறி நிற்கும்..?
பழகிய
உள்ளங்கள் நாங்களே
கலங்கிப் போயல்லவா,
நிற்கின்றோம்...
உங்கள்
இரத்த உறவுகள்
எங்கெங்கோ
கதறியல்லவா நிற்கும்..!

உங்கள் திருமுகங்கள்
அந்நிய நாட்டின்
புதைகுழிகளுக்குள்
விழிமூடிப் போனதேன்..?

உம்மைச்
சுமக்க முடியாமற் போன
எம்மை நினைக்கையில்
வெட்கமும், வேதனையும்
சேர்ந்து நின்று
வாட்டுகின்றன...

மறைந்து போன
தோழர்களே..!
எங்களை
மன்னித்து விடுங்கள்..,
உங்களை மட்டும்
விட்டுவிட்டு
நாம் மட்டும்
நழுவி விட்டதற்கு...

உங்கள்
நினைவுகளைச் சுமந்தபடி..,
இனிவரும்
பெப்ரவரி பதினைந்துகள்..,
எம்மை
நாடி வரும்...

உங்கள்
சுவாசம் கலந்த
இந்தக் காற்று...
உங்களைத்
தினம்தினம் எமக்குள்
கொண்டுவரும்...

26 January 2012

தூரமாகிய நான்

விலகிச் சென்றதால்
தூரமாகிப்போனேன் என்கின்றேன்..,
விலக்கப்பட்டேன் எனப்
பழி சுமத்த விரும்பாமல்...

பழகிய கணங்களின்
ஞாபகத் திசுக்களை
பழகியதால் வந்த கனதிகள்
நசுக்க,
கசிந்த கலவையில்
நசிந்து மசிந்திருந்த உறவை
வடித்துப் பிரித்து
வைத்திருக்கின்றேன்,
மீண்டும் பொதித்துவிட
விரும்பாமலே...

மீண்டும்
பொதிந்து வைத்துப்
பொசுக்கக் கொடுப்பதிலும்
பாசம் சடலமாகவே
இருந்திடட்டும் என்னிடம்...

பழகாமலே இருந்திருக்கலாம்,
தூரமாகிப் போவேன் எனத் தெரிந்திருந்தால்...

(26.01.2012)

25 January 2012

மனப்புண்சிரிப்பு

காயங்களை
மனதுக்குள் புதைத்தது நான்..,
காயம்செய்து
மனதையே புதைத்தது நானல்ல...

என் மனம் என்ன விதையா,
புதைத்தால் துளிர்க்கவும்,
துளிர்த்துச் சிரிக்கவும்?

மனம் புன்சிரிக்கவில்லை,
மனப்புண் சிரிக்கின்றது.

மா ரணம் மரணத்தில்
முடியாது..,
மரணத்தோடுதான்
முடியும்...

காரணம்,
புதைக்கப்பட்டது
என் மனம்தானே அன்றி,
நானல்லவே...

(25.01.2012)


19 January 2012

மனவோவியம்

மணல் ஓவியத்தைத்
தென்றல் கலைத்தபோது
திட்டினேன்...

கடலலை வந்து முத்தமிடக்
காத்திருந்தேன்...

வந்த கடலலை முத்தமிட்டது...
வந்த வேகத்திலேயே
கவர்ந்து சென்றுவிட்டது...

கலைந்தது..,
நான் வரைந்த மணலோவியமும்..,
நான் கொண்ட மனவோவியமும்...

கவரப்பட்ட போதிலும்
கரையவில்லை...
கடற்கரை மணலும்..,
என் மன நினைவும்...

(27.10.2007)

17 January 2012

ஒரு (ஆண்) தலைக் காதல்

அணு உலைகள் எதற்கு...
ஒரு பார்வைக்கு
இத்தனை சக்தி இருக்க...

பாவை பார்வையில் பட்டாலும்
பாவையின் பார்வை பட்டாலும்
உடலெங்கும் உயரழுத்த மின்சாரம்...

மின்கலமாவது தேவைதான்...
அவள் வராததால்
வரும் மின்தடைக்காய்...

அவள் இவன் சம்சாரம் ஆவாளோ
இவன் அவள் சஞ்சாரி ஆவானோ
இவன் காலமும்
அவள் காதலும்
தீர்மானிக்கும்...

அதுவரைக்கும் காகிதம்
கையிலேயே இருக்கட்டும்,
கவியெழுதவும்..,
கண்ணீர் துடைக்கவும்...

(31.05.2011)

16 January 2012

பல கைகள் சிந்தும் பருக்கைகள்

தினமொரு சுவை தேடிய நாவு...

சமைத்துவைத்திருந்ததை மறுத்துச்,
சமைக்கவைத்துண்ட கணங்கள்...

கோபவேளைகளில்,
பறக்கும் தட்டங்களாகிய
உணவுத் தட்டங்கள்...

கள்ளத்தீன் தின்று,
பசியடங்கிப் போனபின்
வீணடிக்கப்பட்ட உணவுகள்...

முதல்நாள் மீதத்தை
மறுத்தொதுக்கிய
மறுநாட்கள்...

தினமும் சாதமாவெனப்
பழித்துண்ட
பலநாட்கள்...

உணவு தேடி வந்ததால்,
அன்று தெரியாத அருமை..,
இன்று தெரிகின்றது...

சிந்தும் ஒரு பருக்கைச் சோற்றில்,
பல வெறுமை வயிறுகள்
தெரிகின்றன...

தவறிச் சிந்திப் போகையில்,
பொறுக்கிச் சேர்த்துக் கொள்கின்றேன்...

எங்கோ ஒரு மூலையில்
நிகழ்ந்துகொண்டிருக்கும்
பட்டினிச்சாவின் கொடுமையை
இந்தச் சோற்றுப் பருக்கை
போக்கிவிடாதுதான்...
ஆனால்,
பல கைகள் வீணடிக்கும் பருக்கைகள்
ஒருவனுக்கு ஒருவேளை உணவாகலாம்...
ஒருவேளை அவனுக்கு உயிராகலாம்...

புரியாமல்,
அன்றைய நான் ஒருவன்,
என்னைக் கேவலமாய்ப் பார்த்து
நகைக்கின்றான்...

(02.02.2009)

09 January 2012

அறுந்த வால்

பல்லி அறுத்துவிட்ட
வாலைப் போலே,
என்னை நீ அறுத்தபோதுதான்
தெரிந்துகொண்டேன்,
ஒட்டிக்கொண்டிருந்த
வால்தான் நானென...

பல்லிக்கும் உனக்கும்
வாலை அறுத்துவிட்டதோடு
முடிந்துபோனது...

எனக்கோ
என் மனதை அறுத்துக்
கூறுபோட்டுக்கொண்டேயிருக்கின்றது
அறுந்த அந்த வால்,
வாளாக மாறி...

(12.03.2010)

*****

அது, அன்று...

இன்றும்
பல்லி நினைத்துக்கொண்டிருக்கின்றது
அறுத்துவிட்டது தானென...

நானாகக் கழன்றுகொண்டதை
அது உணராமலே
கத்திக்கொண்டிருக்கின்றது...

ஒட்டிக்கொண்டு
அதற்கேற்ப ஆடிக்கொண்டிருப்பதிலும்
வெட்டிக்கொண்டு
எனக்காகத் துடித்துக்கொண்டிருப்பது
சுகமாய்த்தானிருக்கின்றது...

(09.01.2012)