15 February 2012

இது அழகான நினைவல்ல..! அழுத்தமான நிகழ்வு..!!

பயணங்களில் இன்னுமொரு பக்கமுண்டு. ஈழத்தமிழர் கூடுதலாக அனுபவித்திருக்கிறார்கள். இன்றும், அனுபவிக்கின்றார்கள். புலம்பெயரும் பயணத்தின்போது அனுபவிக்கும் இன்னல்கள், சொல்லில் வடிக்க முடியாதவை.

அப்படியொரு பயணத்தில், என் கண்முன்னே போயின இரு உயிர்கள்...
மொஸ்கோவிலிருந்து உக்ரேன் போகும் வழியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு இது...
பனி மூடிய நீர்ப்பரப்பில், நெஞ்சளவு நீரில், நீண்ட தூரம், நீண்ட நேரம், மறைக்குளிரில் நடந்தபோது வந்த வேதனை இது...

15 பெப்ரவரி 2002 இல்,அந்தத் துக்கநிகழ்வு நடந்தபின், குளிரின் விறைப்பினின்றும் ஓரளவு உடல்தேறி, ஒரு மாதத்தின் பின் எழுதியதை, மரணித்த அந்த உயிர்களுக்காகச் சமர்ப்பணம் செய்கின்றேன்...

இது அழகான நினைவல்ல..!
அழுத்தமான நிகழ்வு..!!
(15.02.2002 02:00-03:30)

காதலர் தினம்
தாண்டிய
அந்த நள்ளிரவு..,
இரு கல்லறைகள்
புதிதாய்ப் பூமியில்
எழுந்தன...
இதயத்தை
உடைத்துவிட்ட
அந்தக்
கறுப்பு நிமிஷங்களுக்கு..,
பனிக்குளிரும் காற்றும்
கட்டியம் கூறி
நின்றன...

அந்தக்
குளிர்மையின் உச்சத்திற்கு
முகம் கொடுக்க முடியாத
இரு ஆத்மாக்கள்..,
புத்துலகம் தேடிப்
பறந்து போயின...
கனவுகளும்
எதிர்பார்ப்புகளும்
அவர்களுக்கு
கானல் நீராகிப் போயின...

அன்புத் தோழர்களே..!
அப்பன், அன்பழகன்
என்ற நாமங்கள், இனி
யாரை
உரிமை கூறி நிற்கும்..?
பழகிய
உள்ளங்கள் நாங்களே
கலங்கிப் போயல்லவா,
நிற்கின்றோம்...
உங்கள்
இரத்த உறவுகள்
எங்கெங்கோ
கதறியல்லவா நிற்கும்..!

உங்கள் திருமுகங்கள்
அந்நிய நாட்டின்
புதைகுழிகளுக்குள்
விழிமூடிப் போனதேன்..?

உம்மைச்
சுமக்க முடியாமற் போன
எம்மை நினைக்கையில்
வெட்கமும், வேதனையும்
சேர்ந்து நின்று
வாட்டுகின்றன...

மறைந்து போன
தோழர்களே..!
எங்களை
மன்னித்து விடுங்கள்..,
உங்களை மட்டும்
விட்டுவிட்டு
நாம் மட்டும்
நழுவி விட்டதற்கு...

உங்கள்
நினைவுகளைச் சுமந்தபடி..,
இனிவரும்
பெப்ரவரி பதினைந்துகள்..,
எம்மை
நாடி வரும்...

உங்கள்
சுவாசம் கலந்த
இந்தக் காற்று...
உங்களைத்
தினம்தினம் எமக்குள்
கொண்டுவரும்...