17 August 2017

துரும்பு தேடித்.., துரும்பு ஆகி.., நான்...

தவித்துத் தடுமாறித்

தவிர்த்த போதிலும் தேடிய நான்...


துளிநீரில் தத்தளித்து

இல்லாத் துரும்பு தேடும் நான்...


கண்களின் அடங்காத் தாகம்,

வெளிப்படாத் துளிகளில்

உணர்கின்றேன்...


மனதில் அடங்கும் தவிப்பு,

வெளிப்படும் துடிப்புக்களில்

உணர்கின்றேன்...


என்னை உணர மறுதலிப்பா...

என் உணர்வின் புறக்கணிப்பா...


நாளையும் நானும்,

சேர்ந்தே காத்திக்கின்றோம்

விடியலுக்காக...


நாளை விடிந்ததும்,

மீண்டும் தனித்தவன்தானே

விடியும்மட்டும்...


என்

விடியல் எட்டுகையில்

நான்

துளியில் எட்டும் துரும்பாவேன்

31 May 2017

நன்னயமா, நா நயமா, தேவை???

அன்று,
பட்டும், பார்த்தும்
உச்சவலியுணர்ந்த தமிழா,
இன்று,
அனர்த்தத்தில் ஆனந்தம் 
கொண்டு,
ஆண்டவன் தண்டனை 
என்கின்றாய்.

எதுவாய் இருந்தாலும்
இது
மனிதாபிமானமாய் இல்லை

அன்று,
மனிதாபிமானம் தேடித்தேடி
அவலப்பட்டோம்...
இன்று 
மனிதாபிமானம் தொலைத்துக்
கேவலப்படலாமா...

ஓலங்கள்
கண்டும் கேட்டும்
குதூகலிப்பதுவும்
திருப்திகொள்வதுவும்
மறத் தமிழர் குணமல்ல...
மாறாகத்
தமிழர் குறைக் குணம்...

இப்போது,
நன்னயம் கூடச்
செய்யத் தேவையில்லை
நா நயமாய் 
இருப்பதுவே பெருஞ்சேவை

முன்னர் ஓர் தடவை,
இப்படியானதோர் சந்தர்ப்பம்,
எதிரித் தேசம் என்று,
சாதகமாக்கப்படவில்லை. 
முதலாய்க் கரம் நீட்டியது,
தமிழர் தேசம். 
மறந்தாலும்
மறக்கடிக்கப்பட்டாலும்
நிகழ்ந்த உண்மை இது. 

"அவலங்களைத் தந்தவனுக்கே திருப்பிக் கொடு"
இதுதான் அவர் வாக்கே அன்றி,
அவலங்களைத் தந்தவனின்
அவலங்களில் திருப்தி கொள்வதல்ல,
அவர் வழிகாட்டல்

உதவ முடிந்தால் கரம் கொடு
முடியாவிட்டால்,
இறைவனிடம் வரம் வேண்டு.   

உயிரில்லாத உணர்வுகள்
வேண்டாம்
உயிர்களில் இல்லா உணர்வுகள்
வேண்டவே வேண்டாம்.

#Srl_Lanka_floods_2017

02 May 2017

ஓர் புது ஞானம்???

நினைத்தது கிடைக்காமல்
கிடைக்கும் சுகமும்
சோகமாகத்தானிருக்கும்...

நினைத்தது கிடைத்துக்
கிடைக்கும் வலிகூடச்
சுகமாகத்தானிருக்கும்...

மனதைத் 
தெரிந்துகொள்ளவும்
புரிந்துகொள்ளவும்
முடியுமென்றால் மட்டுமே,
மாச்சர்யங்கள் இல்லாத
மனித மனங்கள்
உலகில் உலா வரும்.

சாத்தியமாக்குமோ
விஞ்ஞானமோ..,
மெய்ஞானமோ...

அல்லது
சாத்தியமாக்க வேண்டுமோ
ஓர் புது ஞானம்???

06 March 2017

குளிர் மை நினைவுகள்

ஈழத்தின் பெரும்பாலான மக்கள் எல்லோரிடமும் இந்த நினைவுகள் மட்டுமே மிச்சமாக...

நான் பிறந்ததுமுதல், 'வாழாத' என் தாய்வீடு (எமது வவுனியா நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில், பூவரசங்குளத்தில்) என் நினைவில்...

தாயின் தந்தை, தன் சொந்த இடம் விட்டு, சற்றுத் தொலைவே வாழ வந்ததால், உறவுகள் வரும்போது தங்கவெனக் கட்டிய பாச வீடு, இராணுவ முகாமாகிப் போனது. 
1990 இல், போர், எமது நகரத்திலிருந்து எம்மை வெளியேற்றியது. கிராமத்தில் அம்மப்பாவின் வீட்டில் நாமும், சில நட்புக் குடும்பங்களும் தஞ்சமடைந்திருந்தோம். நாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து, சற்றுத் தொலைவில்தான் தாய்வீடு தனித்திருந்தது.

முதலில், அந்த வீடு, இலங்கை அரசிற்கு, அப்பிரதேசத்திற்கான உதவி அரசாங்க அதிபர் காரியாலயமாகச் செயற்படுவதற்காக, எமது குடும்பத்தால் (வாடகைக்கு) வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர், இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு, அதன்பின்னர், இந்திய இராணுவ முகாமாகவும் மாறிப்போனது.

எமது வீட்டோடு, இன்னமும் ஒரு சில வீடுகளும் அவற்றிற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, இராணுவ மயமாக்கப்பட்டுப் பசுமையைத் தொலைத்திருந்தன. மண் அரண்களும், பதுங்கு குழிகளும் விளை நிலத்தை, விளையா நிலமாக்கியிருந்தன. இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர், அங்கு குடிகொண்டிருந்த சொல்ல முடியாத ஒரு வெறுமை, நாம் அங்கு செல்லவே தடையாக இருந்தது. எனவே, வெறிச்சோடிய சூனியப் பிரதேசமாக அவ்விடம் மட்டும் பிரதான நெடுஞ்சாலயையொட்டிக் (மன்னார்-வவுனியா) காணப்பட்டது.

இப்படியான நேரத்தில்தான் நாம் அந்தக் கிராமத்திற்கு இடம்பெயர்ந்திருந்தோம். மீண்டும் நகருக்குத் திரும்ப முடியாது போர் உக்கிரமடையவே, பல குடும்பங்கள் ஒரே வீட்டில் வாழ வேண்டிய நிலை. ஆனால், மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். நீண்டகாலம் வாழவேண்டிய நிலையை யுத்தம் தோற்றுவிக்கும் சூழலே நிலவியதால், எமது வீட்டினைதச் சுத்தப்படுத்தி அங்கேயும் சில குடும்பங்கள் வாழ்வதே நல்லது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. 

குடும்பத்தவர்கள், நண்பர்கள் என்று எல்லோருமாக, அடுத்துவந்த ஒரு நாளில் வீட்டைப் பார்வையிடச் சென்றோம். இரு வரவேற்பறைகள், சமையலறை, ஆறு அறைகள் கொண்ட பெரியதொரு வீடு. நான் பிறந்து வளர்ந்ததற்கு, அன்றுதான் முதன்முதலில் என் நினைவறியப் பார்வையிட்டேன். சுத்தப்படுத்தியபின் அங்கேயும் சில குடும்பங்கள் வாழ்வோம் என்று தீர்மானித்தோம். 

அன்றிரவு, இரவுணவு முடித்ததும், அனைவரும் அமைதியாயிருக்க, வானொலி மட்டும் செய்தி பேசிக்கொண்டிருந்தது. கிராமத்தின் இரவின் அமைதியைக் கிழித்தபடி குண்டுச் சத்தங்கள். தொடர்ந்தால் பதுங்கத் தயாராக, அனைவரும் தயாராக, சற்று நேரத்தில் நின்றுவிட்டன. எந்த வீடுகள் சிதறினவோ என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டார்.

பொழுது விடிந்தது. வெடித்த செய்தியும் வந்தது.
ஆம்... எமது வீடும், அதற்கு அடுத்த வீடும் முற்றாக தகர்க்கப்பட்டுவிட்டன. விரைந்த பெரியவர்களோடு நானும் சென்றேன். 
நிலத்தோடு குவிந்திருந்த இடிபாடுகளில், நேற்றைய என் பாதச்சுவடுகளைக் காணவில்லை. 
தேடிய என் விழிகளில் இருந்து, நானறியாமல், யாருமறியாமல் சிந்திய கண்ணீர், வெடித்துச் சிதறிப்போன அந்த வீட்டின் சூட்டைச் சற்றேனும் தணித்திருக்குமா...

பி.கு:
  • அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டு, மீண்டும் எமக்குத் திருப்பித் தரவில்லை என்பதால் அரசே இழப்பீடு தரவேண்டும். 
    ஆனால், வாடகையே தராத இலங்கை அரசு இழப்பீடு உடனே தந்துவிடுமா... 
    ஒன்றரை இலட்ச இலங்கை ரூபாய்களை மட்டுமே தருவதாகச் சொல்லி (வீட்டின் பெறுமதி அல்ல) அதையும் இழுத்தடித்தது அரசு. 
  • இதில் இடையே வந்த இந்திய இராணுவம், தான் கையகப்படுத்தியிருந்த குறித்தகாலத்திற்கான வாடகையை, வீட்டை விட்டு வெளியேறியவுடன் எமக்குச் செலுத்தியிருந்தது.
    அதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்திய இராணுவ காலப்பகுதியில், அவர்களோடு இணைந்திருந்த ஒரு தமிழ் ஆயுதக்குழு, தமது ஆட்சேர்ப்புக்காக, இளைஞர்களைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்று எமது வீட்டின் வளவிற்குள் ஒரு மூலையில் முட்கம்பிகளிடையே அடைத்து வைத்திருந்தது. அவர்களில் எனது அம்மாவின் தம்பியும் ஒருவர். அந்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியைச் சந்தித்த எனது தந்தை, “எமது வீட்டில், என் மச்சானை உள்ளே கூட விடாமல் வெளியே அடைத்து வைத்திருக்கின்றீர்களே. இனி, நீங்களும் இருக்கத் தேவையில்லை. வெளியேறிவிடுங்கள். அதுவரை நான் இங்கேதான் இருப்பேன்.” என்று கூறி தான் அங்கிருந்து (முகாமைவிட்டு) வெளியேற மறுத்துவிட்டார். சில நாட்களில் வெளியேறி விடுவதாக உறுதி கூறி, அப்பாவை பலவந்தப்படுத்தி அனுப்பிவைத்துவிட்டு (ஆனால், அன்று மாமாவை விடுதலை செய்யவில்லை), கூறியபடியே, அடுத்து வந்த நாட்களில் வெளியேறி விட்டார்கள். இருந்த காலத்திற்கான வாடகையையும் அன்றைய பெறுமதிக்கேற்ப முழுமையாக எமக்குச் செலுத்தியிருந்தார்கள். 
    எமது நகரக் கத்தோலிக்க மதகுருவின் தலையீட்டால், பலவந்தமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இளைஞர்களும் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

(13.05.2008)