▼
26 June 2015
"முதலான பெரும் முதல்"
ஒரே ஒரு கருவறை,
பல்லாயிரம் கருக்களின்
உருவாக்கம்.
ஒரே ஒரு இதயவறை,
பல்லாயிரம் குருதிகளின்
புதுச்சுரப்பு.
ஒரே ஒரு சுவாசவறை,
பல்லாயிரம் சுவாசங்களின்
புத்துணர்ச்சி.
இப்பல்லாயிரங்களில்
நானும் ஓர் அங்கம்
என்பதில்
என்றும் எனக்குப் பெருமிதம்.
நான் நானாக
முதற் புள்ளி தந்த
பெரும் பள்ளி.
நான் நானாக
முதல் அடி வைத்த
பெரும் படி.
ஆரம்பக் கல்வி தந்து
ஆணி வேர் ஊன்றத்தந்த
அறிவு நிலம்.
வளர்ந்த ஒவ்வொரு
வினாடித் துளிகளிலும்
வாழ்க்கை துளிர்த்தது.
வரம் பெற்று வந்த
மழலைகளாய்
வளரத் தொடங்கினோம்.
வளர்த்தது,
"இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்"
எமது அறிவின்
தொடக்கப்புள்ளி தந்த
ஆரம்பப்பள்ளி.
ஒவ்வொரு துகள்களிலும்
எம் பாதப் பதிவுகளைத்
தாங்கி, எம்மை
உயர்த்திவைத்த பள்ளி.
கூளாம் மர நிழலும்
கூடவே
காத்திருந்த அத்திவாரமும்
இன்றும் என்றும், என்
மனப்பதிவின் குளிர்த் தடங்கள்.
அருட்சகோதரிகளின்
தலைமைத்துவத்தில்
அருள் பெற்ற மாணவர்கள்,
வவுனியாவின் தனித்துவமானவர்கள்.
ஆண்டு ஐந்து வரையில்தான்
ஆண்களும் மாணவர்கள்
என்பதால், நாங்கள்
முன்னால் மாணவர்கள் அல்ல,
என்றும்
முதல் நாள் மாணவர்கள்.
முதல் தரமானவர்கள்.
இல்லாத எம்மை
வைரக்கல்லாக்கி,
மதிப்பில்லா எம்மை
விலைமதிப்பில்லாததாக்கி
ஒளிர வைத்தது
"உலகிற்கு ஒளியாக"
நன்றி சொல்லிட
நாம் வெளியோர் அல்ல.
வாழ்த்துச் சொல்லிட
நாம் பெரியோர் அல்ல.
மகிழ்கின்றோம்,
பெருமைகொள்கின்றோம்,
சேர்ந்தே கொண்டாடுகின்றோம்,
நம் பள்ளியை...
அடங்காப்பற்றுடன்,
அ. ஜெகான் தர்மேந்ரா
ஜெகான் | அக்னி

No comments:
Post a Comment