27 March 2021

கணிதத்தின் கடவுளுக்குக் கண்ணீருரை..!

அமரர். பா. சிவதாசன் ஆசிரியர் அவர்கள்!!!

 

தோற்றம்: 18.06.1949
மறைவு: 27.03.1996

ஆசிரியர் அவர்களின் மறைவையொட்டி,
ந. சிறீதரன் அவர்களால் எழுதப்பெற்றது.

இருண்டு போயிருந்த எங்கள் வானுக்கு
ஒளி கொடுத்த அறிவுச் சூரியனை
மரணக் கள்வன்
களவாடிச் சென்றுவிட்டான்...

இது கனவாய் மட்டும்
இருக்கக் கூடாதா...
எமையெல்லாம் தனியாய்த் தவிக்கவிட்டு
எங்கள் தெய்வமே..,
எப்படி உங்களால் பயணிக்கமுடிந்தது...

நாம் இருட்டில் வாழ்க்கையைத் தொடரமுயல
எமக்குள் கோடிபிரகாசக் கதிரவனாய் உதித்து
எமையும் பிறருக்கு நிகராய் நிமிரச் செய்தீர்கள்...

சில நூறு வைத்தியர்கள்
பொறியியலாளரெனப்
பல தரத்து உயர் உத்தியோகத்தவர்கள்
வன்னியில் முளைத்தெழ
மூலமாய் நின்றீர்கள்...

அதுதான்,
உங்கள் வாழ்க்கையின்
ஒரே இலட்சியமாக
எமக்கு நாளெல்லாம்
இனிமையாய்ப் பாடமெடுத்தீர்கள்...

முரண்டு பிடிக்க நாங்கள் முயன்று
முடிவில் - உங்கள்
பனைமட்டைகளிடம் பணிந்து
கல்வியைத் தொடர்ந்தோம்...
கல்லென நிமிர்ந்தோம்...

மனிதர்கள் எல்லாம்
இறப்பது இயற்கை...
ஆனால்,
தெய்வம் சாகக் கூடாது...
அதை
எம்மால் சகித்துக்கொள்ள
முடியாது...

”நாங்கள் உங்களின் வார்ப்புக்கள்”
நீங்கள் காட்டிய பாதையில்
பயணத்தைத் தொடர்கின்றோம்...
கூடவே,
உங்களை எங்கள் மனங்களில் சுமந்தபடி...

*****

அவரிடம்
கணிதம் கற்கக் கிடைத்தது,
அன்று கிடைத்த பேறு என்றால்,
அவரின்
இறுதிப் பயணத்தில்,
கண்ணீர்த் துளிகளையும்
இக்கவித் துளிகளையும்
சமர்ப்பிக்கக் கிட்டியது,
வர்க்கும் கிடைக்காத பெரும்பேறு...