23 November 2016

ஜாதி..!

நாதியின்றிப் போனால்கூட
ஜாதிபார்க்கும் சமுதாயம்,
கபோதிகளின் கூடாரம்...

வேதியியல் மாற்றங்கள்,
ஜாதியிலே நிகழவேண்டும்...

ஜாதியில் சிறுதுமியேனும்,
மீதியின்றி ஒழியவேண்டும்...

பாரதியின் கவிவரிகள்,
ஓதிப்போன பின்னும்கூட,
பாதியேனும் மறையாத...
ஜாதி,
சமுதாயப் பேதியாக,
நதியாக ஓட,
நடுவிலே சுகமாய்
சுதிபாடும் நரகர்களாய்
நாங்கள்...

உதிக்கவேண்டும் மதியிலே...
உறைக்கவேண்டும் மனதிலே..

மதிக்கும் மனிதம்...
இனியும்,
ஜாதியில் மிதிபடலாமா..?

ஜாதிகள் ஜோதியாக ஒளிரக்கூடாது...
ஜோதியிலே எரிக்கப்படவேண்டும்...

சதிராடும் ஜாதியை,
சாக்காட்டவேண்டும்...
திதிவைத்து,
முடிவாக்க வேண்டும்...

போதித்து மட்டுமே
போகாமல்,
விவாதித்து மட்டுமே
மாளாமல்,
சாதிக்கவேண்டும்...
காலத்தின் பதிவாக...
நம் விழிப்பின் பதிலாக...

ஜாதியின்றி
மதிக்கப்படும் மனிதமே
உலகவாழ்வின் பெருநிதியம்...


(03.07.2007)

18 November 2016

தாய்மொழி

பள்ளி முன்னோடி, முகநூல் நண்பன்,
முகநூலில் வைத்த கேள்விக்கான,
எனது இன்றைய பின்னூட்டங்களின் தொகுப்பு...


வலிகள் நேரும்போதெல்லாம்,
அழைக்கப்படும்,
தாய்மொழியூடான தாயின்
வலிமைக்கு நிகரான ஒலி,
வேறேதும் இல்லை. 

ஆனால், வரைவிலக்கணம் என்றால்...
🤔

தொப்புள்கொடியூடாக கடத்தப்படுவது,
உயிர் மட்டுமல்ல, உணர்வும் கூட...
அந்த உணர்வுகளை வெளிப்படுத்த, எந்த மொழி திணிப்பின்றி இயல்பாக வெளிப்படுகின்றதோ, அதுவே தாய்மொழி. 

தாய் பேசும் மொழி, தாய்மொழி என்பதை, என்னால் ஏற்க இயலாது. 

வாய் பேச இயலாதவர்களுக்கும்,
தாயின் மொழி பேசத் தெரியாதவர்களுக்கும்,
தத்தெடுக்கப்பட்டு வாழ்வை வேறெங்கோ வாழ்பவருக்கும்,
தாயின் மொழி, எப்படித் தாய்மொழி ஆகும்?

தாயின் மொழி,
தாய்மொழியாகக் 
கிட்டுவது பேறு என்றால்,
தாய்மொழி
தமிழ்மொழியாகக்
கிடைப்பது பெரும்பேறு என்பேன். 

ஆனால்,
தாய்மொழி என்பதற்கு வரைவிலக்கணம்,
எனக்குத் தெரியவில்லை...

புலம்பெயர்ந்தோ புலம்பெயராமலோ,
சூழ்நிலையாலோ வீண்பெருமையாலோ,
தாயின் மொழி, தாய்மொழி ஆகக் கிடைக்காதிருப்பது,
'சாபம்'

ஒரு நேரம் தமிழருக்கென ஓர் தேசம் அமைந்தால்,
சிலவேளைகளில்
தமிழ்மொழி அகழ்ந்தெடுக்கப்படவேண்டிய,
கவலைக்குரிய நிலை வரலாம். 

எம்மொழியில் வாழ்ந்தாலும், படித்தாலும்,
தமிழருக்குத்,
தமிழ்மொழியைத் தாய்மொழியாக்குவது,
நம் கடமை, பொறுப்பு,
இதர.., இதர...

இப்போதெல்லாம் பேனா கொண்டு, 
'தமிழ்' எழுத முற்படுகையில்,
'tamiz' என வருவது,
கணினித் தொழில்நுட்பம் தமிழுக்குத் தந்த வளர்ச்சி அல்ல. 

கணினியில் தமிழ் வளர்வது அவசியம். 
கணினியில் மட்டுமே வளர்வது அவசியம் மாறவேண்டியதொன்று. 

காகிதத்தில் தமிழ் எழுத்து,
உருவாய் இருக்கும்வரையிற்தான்,
கணினியில் தமிழ்,
எழுத்துருவாய் இருக்கும். 

பேச்சு மட்டுமல்ல,
கை எழுத்தும்,
சந்ததிக்குக் கடத்தப்படவேண்டியது,
மிக மிக மிக அவசியம்...

எனக்கு இதுவரையில் இந்த அ(கே)வலநிலை வரவில்லை. 
வரவும் விடமாட்டேன்.

29 October 2016

வாழ்க்கை!

வாழ்க்கை!
செதுக்கி வாழ்வதல்ல,
வாழ்ந்து செதுக்குவது...
நிகழ்ச்சிநிரலின் தொகுப்பல்ல,
நிகழ்வுகளின் தொடுப்பு...
கனவுகளின் விம்பமல்ல,
விம்பங்களின் நிஜம்...

தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையில்,
திணிக்கப்படும் தீர்மானங்களால்,
நகர முடியாமல் திணறியபடி,
முற்றுப்புள்ளிக்கு முன்னே
முழுதும்பெறாமலே 
முற்றுப்பெறுகின்றது
வாழ்க்கை!

18 May 2016

இழந்ததெல்லாம் நினைவில் இழக்காமல்...

இன்றை,
அன்று பார்த்த வானம்
கண்ணீர் வடிக்குதோ
இன்று... 

குறுக்கிக் குதறி
கதறக் கருக்கி
அழிக்கப்பட்டது
தீவிரவாதமல்ல,
தீவிரமாய்த் தமிழினம்...

மனங்களைத் தொலைத்த 
பிணங்கள்,
உயிர்களைப் பறித்த 
இத்தினங்கள்,
இனவெறியின் வெற்றி நாட்கள்...
தமிழினத்தின் வேதனை நாட்கள்...

புத்தன் பார்த்திருந்தால்,
அன்றே,
'நித்திலத்தில் இதுபோல்
எத்தினமும் வேண்டாம்'
என்றே,
சித்தம் கொண்டிருப்பான்...
பௌத்தம் கொன்றிருப்பான்...

களம் (நி)(கொ)ன்ற, 
சிங்களர் மனமும்
கலங்கும் ஒரு நாள்,
அந்த நாளை எண்ணி...

அப்போது,
மன்னிப்பு வேண்டாம்,
ஒரு பூ மட்டும் போதும்..,
ஒரு துளிக் கண்ணீரோடு...

காட்சிகளில் கண்டதையே
எம்மால்,
தாங்க முடியவில்லை...
காட்சிகளில் வாழ்ந்தவர்கள்
எப்படித் தாங்கியிருப்பார்கள்...

ஒரு குரல் மட்டும்
'ம்' என்றிருந்தால்,
அவலம்,
தென்திசையும் 
உணர்ந்திருக்கும்...

தலை வணங்குகின்றோம்...

ஏழாண்டுகள் ஆகியும்,
வாழ்வில் ஏதுமில்லாமல்..,
இழந்தவர்கள்...

தமிழீழம் மனதில் இருக்கட்டும்...
உரிமை உணர்வில் இருக்கட்டும்...
மிஞ்சிய உயிர்கள்
உயிரோடிருக்க..,
வாய்கள் மூடியே இருக்கட்டும்...

இழந்ததெல்லாம்
நினைவில் இழக்காமல்..,
இருக்கட்டும்...