27 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 04

நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

010203

ஆளரவம் அற்ற நேரம்...

ஆனால், வீடுகள் செறிந்த இடம். தனித்தனியான வீடுகள். எங்கும் இருள் கவிந்து இருந்தது. எம்முடன் வந்த தமிழ் முகவர்கள், எங்களை அழைத்துச் சென்று, ஒரு வீட்டின் கதவைத் திறந்தார்கள். வீடு தெருவிலிருந்து கிட்டத்தட்ட 20 அடிகள் தள்ளி இருந்தது. கதவைத் திறந்ததுதும் உள்ளே உடனேயே இன்னுமொரு கதவும் இருந்தது. குளிர் அதிகமான நாடு என்பதால், தனி வீடுகள் இவ்வாறுதான் இரு கதவுகள், சாளரங்களுடன்  இருக்குமாம் என்று சொன்னார்கள் எமது முகவர் பாதுகாவலர்கள். 

ஒரு வழியாக உள்ளே போனதும், கதவுகளை மூடியபின் மின்விளக்குகளை ஏற்றினார்கள். உள்ளே சில தளவாடங்களுடன் வெறுமை மிக அதிகமாக இருந்தது. அடுத்த பயணத்துக்குத் தயாராக இருந்த எம்மைப்போலவே..  

எம்மிடம் நாளை வருவதாகவும், வெளியே தாங்களே பூட்டி விட்டுப் போவதாகவும் சத்தமின்றியும் , நடமாட்டம் வெளித்தெரியாது இருக்கும்படியும் கூறிவிட்டு, எமது பாதுகாவலர்கள், எம்மை வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒரு பூட்டப்பட்ட வீட்டினுள்ளே,  நம் கனவுகள் அடித்துப் பூட்டப்பட்டு,
அகலத் திறக்கப்பட்டது, எமது பசுமை நாடிய பயணத்தின் தாமதம்.., நம் அனுமதி இன்றியே...

இது புரியாமல், தெரியாமல், வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு அடுப்பு இருந்தது. (எரிவாயு அடுப்பு, 4 அடுப்புகள் கொண்டது) தேநீர் போடுவதற்குரிய பொருட்களை அப்போதுதான் கூடவே கொண்டு வந்து தந்திருந்தார்கள். கூடவே பாணும் (பாண் என்றால் Bread). சில கோப்பைகளும், மேலும் பாத்திரங்கள் சிலவும் இருந்தன. தாயகத்தை விட்டு நீண்ட நாட்கள் புறப்படுவதற்கேற்ற உடைகளுடனேயே இருந்ததால், ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று, உடை மாற்றி விட்டு, முகம் கழுவ சென்று தண்ணீரைத் திறந்தால், ஜில் என்று சிலிர்த்தது முழு உடம்பும். எமது நாட்டில், குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் நீர் குழாயினூடாக வந்து கொண்டிருந்தது. பக்கத்திலேயே இன்னுமொரு குழாய்க்கான (சுடுநீர்) திருகி இருந்தது. திருகிப் பார்த்தால் அதிலும் தண்ணீர் தண்மையான நீராகவே இருந்தது. (தண்ணீரின் அர்த்தம் அன்றுதான் புரிந்தது). எனவே, முகத்தை நனைத்துவிட்டு, வர, எங்கள் பன்னிருவரில் ஒருவர் தேநீர் ஊற்றி தரக் குடித்துவிட்டு, எமது மாளிகையை சுற்றிப் பார்த்தோம். அந்த நாட்டிற்கு, மிதமான குளிரின் ஆரம்ப நாட்களான போதும், எமக்கோ தாங்கமுடியாத குளிர். ஆனால், வீட்டில் வெப்பமாக்கிகள் வேலை செய்தபடியால், கதகதப்பாக இருந்தது.

தொலைபேசி இருந்தது. காதில் வைத்துப் பார்த்தால் சத்தம் கேட்டது. ஆனால் பழைய காலத்துத் தொலைபேசி ஆகையால், இலக்கத்தை அழுத்தும் வசதி இருக்கவில்லை. சுழற்றும் வசதி தான் இருந்தது. ஆனால், சுழற்றும் அந்த வட்டம் கழட்டப்பட்டிருந்தது. ஏனென்றால், மேலும் பல வீடுகளில் அடைபட்டிருக்கும் எம்போன்றவர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படும்போது, தொடர்பு கொண்டு அரட்டை அடிப்பதுண்டாம். வெளியில் வீணாகத் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதால், எமது பாதுகாவலர்கள் கழற்றிவிடுவதுண்டாம். பின்நாட்களில் அறிந்துகொண்டோம்.

சாளரங்கள் அனைத்தும் காகித மட்டை கொண்டு மூடப்பட்டிருந்தது. இரவில் வெளிச்சம் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடாம். இப்படியாக பாதுகாக்கப்பட்ட (?) வீடு. ஒரு வழியாகப் பின்னிரவு தாண்டும் வேளையில், கண்ணுறங்கத் தயாரானோம். படுப்பதற்கு எந்தவிதமான படுக்கைகளோ அல்லது விரிப்புக்களோ இல்லாத நிலையில், எம்முடன் நாம் கொண்டு வந்திருந்த சாறத்தை விரித்துவிட்டுப் படுத்து உறங்கினோம்.

இனி இப்படித்தான் என்பது, உண்மையில் தெரியவில்லை.

அடித்துப் போட்டாற்போல் நல்ல தூக்கம். எழும்பிப் பார்த்தால், இருட்டாகவே இருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், வெளிச்சத்தின் அனுமதி உள்நுழைய மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் தாண்டிவிட்டது. எழும்பி ஒரு வழியாக குளிர் நீரில், காலைக்கடன்களை விறைப்புடன் முடித்து, முதல்நாள் கூடவே கொண்டு வந்திருந்த பாணை, வெறும் தேநீருடன் உண்டு முடித்து விட்டு, ஊர்க்கதை பேசிக் கொண்டும், அடுத்த எம் பயணம் பற்றிப் பேசிக் கொண்டும், படுத்தும்,  அமர்ந்தும் நேரத்தை ஒட்டினோம்.

இடையே சிறிதாக மறைவை விலக்கி வெளியே நோட்டம் விட்டோம். வீட்டின் சுவர் முழுவதும், முந்திரிகைக்கொடி படர்ந்து, கனிகள் குலைகுலையாகத் தொங்கிக் கொண்டிருந்தன. நாவூற, வாயூற, அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், ஜன்னலைத் திறந்து, பறிப்போம் என்றால், ஜன்னல் முழுவதுமாக சுவருடன் பொருந்தியிருந்தது. மேலே ஒரு சிறு சதுரப் பகுதி மட்டுமே திறக்க முடிந்தது. அடுத்தடுத்து இரு தடித்த கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. (குளிர் வருவதைத் தடுக்க). அந்த சிறிய ஜன்னல் திறப்பினூடாக, ஓரிரண்டு முந்திரிக் குலைகளை வெற்றிகரமாகப் பறித்துப், பகிர்ந்து உண்டோம்.

இரவும் மீண்டும் வந்தது. ஆனால், வருவதாகச் சொல்லிச் சென்றோரைக் காணவில்லை. முதற்பயணம் ஆகையால், எனக்கு மனதில் பயம் பிடித்துக் கொண்ட்து. ஆனால், வந்த உறவுகளில் சிலர், முன் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் வேறு நாடுகளூடாகப் பயணம் செய்ய முயன்று, பிடிபட்டு, நாடு திருப்பப்பட்டு, இவ்வழியாக முயற்சிப்பவர்கள். ஓரிருவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் தைரியம் தர, சிறிது பயம் களைந்து காத்திருந்தோம். பசிக்கத் தொடங்கிவிட்டது. தேநீர் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

இருள் நன்றாகக் கவிந்து வந்த அந்தச் சமயத்தில்..,

வெளியே ஒரு சத்தம்... உற்றுக் கேட்டால் ஒன்றல்ல, பல பாதணிகளின் சத்தம்…

வரவர நெருங்கின. இனம்புரியாத பயத்துடன், மூச்சின் சத்தமும் வெளியே கேட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கதவைப் பார்த்தபடி அனைவரும் நின்றிருந்தோம். எமது வீட்டுக் கதவு திறந்தது. எமது முகவர்கள் உள்ளே வந்தார்கள். எம்மில் இருவரை வெளியே வருமாறு சொல்ல, அவசரமாக பாதணிகளையும், குளிர் உடைகளையும் (Jackets) அணிந்தபடி, இருவர் சென்றார்கள். மீண்டும் உள்ளே ஒரு மூட்டையுடன் நுழைந்து வைத்துவிட்டு, மீண்டும் மீண்டும் சென்று சில மூட்டைகளைச் சுமந்து வந்தார்கள்.

முகவர்கள் சொன்னார்கள்,  உணவுப் பொருட்கள் என்று. சமைத்துச் சாப்பிடுமாறு சொன்னார்கள். மேலும் தொலைபேசி மூன்று தடவைகள் அடித்து நின்று மீண்டும் ஒலித்தால், அழைப்புக்குப் பதிலளிக்குமாறு கூறிவிட்டு, மீண்டும் அடுத்த நாள் வருவதாகச் சொல்லிச் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தோம். மா, அரிசி, கத்தரிக்காய், கோவா, கரட், வெங்காயம் என்று ஒவ்வொன்றும் மூட்டை மூட்டையாக வந்து இருந்தன. அத்தோடு எண்ணை, சிறிய மிளகாய்த்தூள் போத்தல், உள்ளி போன்ற இதர பொருட்கள் வேறொரு பையிலும் இருந்தன. அவற்றோடு, சிகரெட், சீட்டுக்கட்டு என்பவற்றையும் கொண்டு வந்து தந்திருந்தார்கள்.

இவற்றின் வகை தொகை, பசியையும் மீறி நாம் நிற்க வேண்டிய கால அளவைக் காட்டி அச்சப்படுத்தியது. நாளை எமது பயணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன், எல்லோருமாகச் சேர்ந்து சமைக்கத் தொடங்கினோம். பலருக்குச் சமையல் பழக்கமற்ற போதிலும், தெரிந்த சிலரும் நம்முடன் இருந்ததால், அவர்கள் சமைக்க, நாம் உதவி செய்தோம். ஒரு வழியாக, சோறு சமைத்து உண்டுவிட்டு, சீட்டுக்கட்டை எடுத்து விளையாடினோம். விளையாடத் தெரியாதவரும், விருப்பமில்லாதவரும் அருகே இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக அன்றைய தினமும், முடிந்து அடுத்த நாளும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்து (வேறு என்னதான் செய்வது..?) காலத்தை ஓட்டினோம். இரவானதும், தொலைபேசி ஒலித்து நின்று மீண்டும் ஒலித்தது. எம்மில் ஒரு நண்பர் எடுத்துக் கதைத்தார். மேலும் சிலர் வருவார்கள் என்றும், அவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிக்குமாறும் சொன்னார்கள். அன்று இரவும் சோற்றையே சமைத்தோம். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இதற்கிடையே ஒரு ஜன்னல் இடைவெளியூடாக வெளிப்படலையைப் பார்க்ககூடியதாக சிறிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தோம்.

நடுநிசி அளவில், வாகனச் சத்தம் கேட்டது. எமது படலையின் முன்னால் நின்றதும், நாம் முன் வாசலைச் நோக்கிச் சென்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கதவு திறந்தது, புதிதாக நான்கைந்து நபர்கள் வந்தார்கள். ஆனால், அவர்கள் நடை, உடை, பாவனைகள், தோரணைகளில், பயணிகள் மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் உள்ளே வந்ததும் கதவைமூடி விட்டு அனைவரையும் வரவேற்பறைக்கு செல்லுமாற கட்டளையாகக்  கூறினார்கள். நாமும் போய் அமர்ந்தோம். அதிலொருவர் கதைக்கத் தொடங்கினார். அவர்தான் அந்த நாட்டில் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்யும் முக்கிய முகவர். எல்லோருடைய பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்பின் சொன்னார், தற்போது பயண வழிகள் பிரச்சினைக்குரியதாக தடைப்பட்டு இருப்பதால், சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றார். எவ்வளவு காலம் என்று கேட்டதற்கு அவர் சொன்னார், மூன்று மாதங்களுக்கு மேலாக 90 பேருக்கு மேல், பயணிக்க முடியாமல் இந்த நாட்டில் தங்கியுள்ளார்கள். நீங்கள் இப்போதுதானே வந்தீர்கள், பொறுத்திருங்கள் என்று கூறுவது போலக் கட்டளையிட்டார். நம்முடன் வந்த ஒரு நண்பர், அப்படிக் காலம் எடுக்குமானால், தன்னை தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு கூற, முகவர் சொன்னார், இங்கு வந்தால், திரும்பச் செல்ல முடியாது, குழப்பம் செய்தால் உணவும் வராது, ஆதலால் அமைதியாக அனுப்பும்வரை இருங்கள் என்றார்.

அப்போதுதான் முகவர்களின் சுயரூபம் வெளியே தெரியத் தொடங்கியது. அவர் தனது (அன்றைய காலத்தில்) விலையுயர்ந்த  அலைபேசியில், எங்கோ தொடர்பெடுத்து, ஒரு சிலர் பெயரைக் குறிப்பிட்டு, இந்த வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் நால்வரை ஒரு துணைமுகவர் அழைத்து வந்தார். அவர்களையும் எம்முடன் தங்குமாறு கூறிவிட்டு, எல்லா முகவர்களும் புறப்படத் தயாரானார்கள். அப்போது நான் சொன்னேன் வீட்டிற்கு (தாயகத்திற்கு) உரையாட வேண்டுமென்று. நாளை அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதாகக் கூறிவிட்டு, வந்தவர்களில் ஒருவரை எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும்படியும், தொலைபேசிக்கு அவரை மட்டுமே பதிலளிக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுவிட, எம்மத்தியில் கனத்த அமைதி சிறிது நேரத்திற்கு நிலவியது.

அப்போது, புதிதாய் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்தார்கள்...

விரைவாகத் தொடரவேண்டும்...

26 September 2021

தியாகதீபம் திலீபன்!

2021

உணவு இல்லா உலகு இல்லை! 

தேவையுமில்லை!
உயிர்ப்போடு இருக்கவும் 
போவதில்லை!

தியாகதீபத்திற்கு,
உணர்வும், உரிமையும் 
இல்லா உணவு 
தேவையாயிருக்கவில்லை…

கையில் இருந்த ஆயுதத்தைக் 
கீழே வைத்துவிட்டு,
அடிவயிற்றில் பசித் தீ மூட்டி,
தானே ஆயுதமானான். 

அன்று, 
அந்தக் கொடுமையைச் செய்யவைத்த,
நாடுகள் உட்பட்டு,
இன்று, 
உலகமே கொடுந்தொற்றால்,
உணவு பற்றாமல், தவிக்கின்றது…

உணர்கின்றார்களோ இல்லையோ,
அந்நாடுகள் உட்பட்டு 
உலக நிலை மாற வேண்டும்…

ஏனென்றால்,
போரிடர், பேரிடர்களில் 
தவித்த காலத்திலும்,
ஈழத்தமிழன்,
உணவுக்காகத் தவிப்பவனைப் 
பார்த்துத்
தவித்த முயல் அடித்தவனில்லை.

தியாக தீபத்தின் தியாகம்,
பசித் தீ மூட்டி, 
அவனை அணையவைத்த,
பாரத நாட்டிலும்,
நம் நாட்டிலும்,
ஒளியாகிச் சுடர்ந்து
இன்றைய பஞ்சத்தை
எரித்திடட்டும்…

வீர வணக்கங்கள்!

🪔🕯🪔


2020

பசிக்கின்றது எனக்கு...

தியாக தீபத்திற்கு...

🪔🕯🪔


2019

‘பசி’
உலகின் முக்கிய இயங்கலே,
இதனைத் தவிர்ப்பதில்தான்...

உடலில் உணரப்பட்டால்
பசி, உணர்வு...
உணர்வில் உணரப்பட்டால்
உணர்வே, பசி...

உணர்வில் உணர்ந்து,
பசி இருப்பையே தவமாக்கி,
உடலும் உயிரும் துறந்த,
உன்னதம்,
தியாகதீபம்!

வீரவணக்கங்கள்!


2018

எதிர்க்க முடியாத
ஆயுதம் ஏந்தி, 
எதிரி எதிர்பார்க்காத
வெற்றியை ஏந்தியது,
தியாகதீபம்!

அன்று 
பணியாத எதிரி,
தீபம் 
அணைந்த பின்,
தலைகுனிந்தபடியே
இன்றளவும்...

நீராகாரமின்றி
மரணித்த திலீபன்,
அடையாள உண்ணாவிரதி அல்ல..,
உண்ணாவிரதத்தின் அடையாளம்...

மரணித்துத் தோற்றவனல்ல,
மரணத்தை வரவேற்று வரலாறானவன். 

தலைவணங்கி,
வீரவணக்கங்கள்...

 
2013

உணர்வா... உணவா...
உணர்வாய் என்று
உணர்வாய் நின்று
உணர்த்தினான்...
உன்னதமானான்...
திலீபன்...
என்றும் ஒளிரும் தீபம்...

25 September 2021

அஞ்சலிகள்! எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு…



2021

பாடல்கள் இசைக்கும் இடத்தில்,
தவிர்க்க முடியாதவர்,

புதிதாய்ப் பாடல்களைத் தராது,
தவிர்த்துச் சென்று,

ஓர் ஆண்டு!

எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு,
நெஞ்சத்து அஞ்சலிகள்!

நீங்கள் தவிர்த்துப் 
போனாலும்,
நாங்கள் தவிர்த்திட 
முடியாமல்,
உங்கள் இசைக்குரல்கள் 
எங்கிருந்தாகிலும் தினமும்
என்னைச் சேர்ந்திடுதே…

பாடும் நிலாவுக்கு
என் வானில்
பௌர்ணமி மட்டுமே…


2020

அமாவாசை - பௌர்ணமி
அமைதி - ஆரவாரம்
அன்பு - வன்பு
அண்மை - சேய்மை
அங்கு - இங்கு
அவசரம் - நிதானம்
அச்சம் - துணிவு
அடி - முடி
அதிகம் - கொஞ்சம்
அந்தம் - ஆதி
அரசன் - ஆண்டி
அவசியம் - அநாவசியம்
அறம் - மறம்
அனுகூலம் - பிரதிகூலம்
ஆம் - இல்லை
ஆக்கம் - கேடு
ஆக்கல் - அழித்தல்
ஆசை - நிராசை
ஆரம்பம் - முடிவு
ஆத்திகன் - நாத்திகன்
ஆதரவு - அநாதரவு
ஆரம்பம் - முடிவு
இறுக்கம் - தளர்வு
இசை - வசை 
இக்கரை - அக்கரை
இன்சொல் - வன்சொல்
இரகசியம் - பரகசியம்
இகழ்ச்சி - புகழ்ச்சி
இலாபம் - நட்டம்
இயற்கை - செயற்கை
இரவு - பகல்
இணக்கம் - பிணக்கம்
இணைந்து - தனித்து
இளமை - முதுமை
இம்மை - மறுமை
ஈரம் - வரட்சி
உயர்வு - தாழ்வு
உள்ளூர் - வெளியூர்
உள்நாடு - வெளிநாடு
உள்ளே - வெளியே
உறவு - பகை
உண்மை - பொய்
ஊக்கம் - சோர்வு
எளிது - அரிது
ஏகம் - அநேகம்
ஏற்றம் - இறக்கம்
ஏறு - இறங்கு
ஒருமை - பன்மை
ஒற்றை - இரட்டை
கனவு - நனவு
கடினம் - இலகு
கலக்கம் - தெளிவு
காய் - கனி
காடு - நாடு
காய்தல் - உவத்தல்
காலம் - அகாலம்
குறைவு - நிறைவு
குளிர் - வெப்பம்
குறுக்கு - நெடுக்கு
கேள்வி - பதில்
சண்டை - சமாதானம்
சரி - பிழை
சமீபம் - தூரம்
சாவு - வாழ்வு
சில - பல
சுத்தம் - அசுத்தம்
சுவர்க்கம் - நரகம்
சுகம் - துக்கம்
செல்வம் - வறுமை
செங்கோல் - கொடுங்கோல்
தர்மம் - அதர்மம்
தண்ணீர்  - வெந்நீர்
தன்வினை - பிறவினை
திருப்தி - அதிருப்தி
தூய்மை - களங்கம்
தைரியம் - அதைரியம்
தோற்றம் - மறைவு
தெற்கு - வடக்கு
தேய்தல் - வளர்தல்
தோன்றும் - மறையும்
நவீனம் - புராதனம்
நண்பன் - பகைவன்
நல்லது   - கெட்டது
நன்மை - தீமை
நம்பிக்கை - அவநம்பிக்கை
நிறைவு - குறைவு
நீதி - அநீதி
நோயாளி - சுகதேசி
ஞாபகம் - மறதி
நெட்டை  -  குட்டை
மயக்கம் - தெளிவு
மானம் - அவமானம்
மாரி - கோடை
முன்பு - பின்பு
முதல் - இறுதி
மேல் - கீழ்
பிறப்பு - இறப்பு
புராதனம் - நவீனம்
வலம் - இடம்
வரவு - செலவு
வள்ளல் - உலோபி
வாதி - பிரதிவாதி
விண் - மண்
விரைவு - தாமதம்
வினா - விடை
வெற்றி - தோல்வி
வீரன் - கோழை
வேதனை - மகிழ்ச்சி
ஆண் - பெண் 

(© நன்றி)

அனைத்து நிலைகளிலும்
அனைத்து இயல்புகளிலும்
அனைத்துக் காலங்களிலும்

நம் குரல் கேட்காது
நம்மோடு பேசியொலித்த
அற்புதக் குரல்...

எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்...

*****

கடினமனச் சலனங்களில்
பாரம் இறக்கி..,
தொலைதூரப் பயணங்களில்
தூரம் குறுக்கி..,
நீண்டநெடும் பொழுதுகளில்
நேரம் சுருக்கி..,

இவர் பிரிவின் வாடலையும்
வருடி ஆற்றுகிறது 
இவர் குரலிசையும் பாடல்களே...

அனைத்து நெஞ்சங்களிலும்..,
அனைத்து இல்லங்களிலும்..,

சப்தநாடிகளின்
நிசப்தத்திலும்,
சப்தமாய்..,

எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்...

*****

பிஞ்சுச் செவிக் காலம்தொட்டு
இன்றுவரை.., இனியும்..,
அந்தக் குரல் 
என்றென்றும்...

காற்றிருக்கும்வரை
சாகாது தம் குரல்...

எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு,
நன்றிகள் நிறையத் தூவி, இதய அஞ்சலிகள்...
🪔🕯🪔

படத்தில் கவிதைகள்…

2004-2006 ம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டவை. 











24 September 2021

அப்பா! என் எழுத்தாஞ்சலிகள்!!



2021

24 ஆண்டுகள் நிறைவில்.., அப்பா! 
(My dad’s 24th memorial remembrance)

அருள் மட்டும் நிறைத்து
ஆனந்தம் முழுதாய்ப் பறித்து
ஏன் அப்பா விரைந்து விட்டகன்றீர்?

விரைவாக நீங்கள் சென்றது,
எங்கள் வாழ்வின் நிறைவைக் 
குறைத்துவிட்டது..,
என்பது 
மறுக்கவியலா உண்மைதான்…

ஆயினும்,
குறைந்த காலத்து உங்கள் 
வழிநடத்தலும் பாதுகாப்புமே
இன்றுவரை, இனியும் என்றால்..,
இன்னும் கொஞ்சமேனும்
எம்முடன் வாழ்ந்திருந்தால்…

🕯 இதய அஞ்சலிகள் அப்பா 🕯

🪔🕯🪔
        💧
          💧

உம் வம்சமும், சாயலும் இப்போ என்னுடன்..,
எல்லாமுமாய்.., தந்தையுமானவனாய்…


2020

23 ஆண்டுகள் நிறைவில்.., அப்பா!

தவித்திடும் தருணங்களில்
உங்கள்
கம்பீரக் காப்பின்றி...

மகிழ்ச்சிப் பொழுதுகளில்
உங்கள்
அன்பின் இருப்பின்றி...

ஆ(க்)கிய நாள் இன்று,
அப்பா!

🕯
இதய அஞ்சலிகள்!

உங்கள் ஸ்பரிசம் தர முயன்று,
உங்கள் அளவு தர இயலாது,
தோற்றுக்கொண்டிருக்கின்றேன்...


2019

22ம் ஆண்டு நினைவில்... அப்பா!

நேற்றைய அந்திப்பொழுதுபோல்
இருக்கின்றது,
என் சூரியனின் இறுதி நாள்...

அன்றைய தினம், காலை,
சகாய அன்னையின் பெருநாள் முடித்து,
பாடசாலைப் புதுக் கோவிலின்,
ஆரம்பத் திருவிழா நோக்கிய நாளொன்றில் 
நின்றுகொண்டிருக்க,

என் குடும்பச் சூரியன் அஸ்தமித்த சேதி வந்தது. 

தகவல் பரிமாற்றங்கள்,
இப்போது போலில்லை அப்போது, என்றாலும்,
குறுகிய பொழுதிலேயே,
பலரின் நேரடி அஞ்சலிகள், ஆறுதல்கள், உதவிகள்...

அதுதான்,
அப்பாவின், மற்றோருடனான உறவாடல்...
பார்க்கும் அனைவரும் நண்பர்கள்,
என்றிருக்கும் அப்பாவின் பார்வை...
ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு 
விதிவிலக்குச் சண்டைகளும்கூட,
அந்த நாளில் 
நிஜமாய்த்தான் துக்கம் கொண்டிருந்தன...

ஒரு கறுப்புச் சட்ட 
மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து,
என்னை ஆண்ட ஒற்றை விழிப்பார்வை,
ஒரு மரச்சட்ட கண்ணாடிக்குள்ளிருந்தும்,
என் மனப் பெட்டகத்திலிருந்தும்,
என்னை ஆள்கின்றது...

அப்பா,
இப்போதெல்லாம் 
‘என்னால்’
நீங்கள் உணர்ந்த,
ஸ்பரிசம்
உணர்ந்து கொண்டிருக்கின்றேன்...

கூடவே,
நீங்கள் இல்லா வெறுமையை
நிரம்பவே உணர்கின்றேன்...

ஆசிகள் தந்திடுங்கள், அப்பா!


2018

அப்பா!
என்றழைக்கப்
பதில் கிட்டாதபோதுதான்,
பெற்றதும் இழந்ததும்
புரிந்தது. 

அப்பா!
நாண் இழுத்த வில் நீங்கள்,
நாண் ஏறிய அம்பு நான். 

தந்த உந்துதலில்,
பயணித்துக்கொண்டிருக்கின்றேன். 

21ம் ஆண்டு
நினைவஞ்சலிகள்...


2017

அப்பா!

அந்தப் பாதுகாப்பு
வான் புகுந்து, மண் நுழைந்து,
இருபது ஆண்டுகள்!

இந்த நாள்
அன்று விடியாமலே
இருந்திருக்கலாம் என்றே,
விடிகின்றது,
இந்நாட்களெல்லாம். 

உங்கள்..,

விரல் நுனி ஊஞ்சல்,
காலிடைவெளி ஒளியல்,
முதுகுபட்டுத் தெறித்த மூச்சு,
கோபக் கடும்குரல்,
ஆழக் கரிசனை,
அவசிய வெருட்டல்,
வசிய வருடல்,
அசைவுகளின் அச்சம்,
இழைந்துவந்த பாசம்,
தவறுகளில் கண்டிப்பு,
தடவித்தழுவிய கண்விழிப்பு,

பெற்ற 
இன்ப வரங்கள்
இன்னும் பல இருக்க..,

பெற்றவரே,
இத்துயரம் ஒன்றை 
ஏன் தந்து சென்றீர்..?

மனம் உடைத்துச் சென்றாலும்,
மனம் நிறைந்து உள்ளீர்கள்...

இருபதாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

தெய்வங்களாய்க் கிடைத்த
வரங்களை விரயம் செய்யாதீர்கள்!!!


2014

உங்களோடு
வாழ்ந்த காலத்திலும்,
உங்களோடு
வாழும் காலம்,
அதிகரிப்பதில்
ஆனந்தமில்லை...

நிஜமாய்க் கூடி வாழ்ந்த காலம்,
நினைவில் கூட வாழ்வதிலும்
கூடுதலாய் இருந்திருக்கலாம்...

நிஜமாய் நீங்கள் இல்லாமல்,
நினைவில் நிரம்பி இருப்பது
இழப்பை நிரப்பிடாது..,
அப்பா..!

பதினேழாம் ஆண்டு இதயவஞ்சலிகள்...


2013

தூங்கிய தோளும்
தாங்கிய நெஞ்சும்
தொடுகை விட்டுப்
பதினாறு ஆண்டுகள்...

தூக்கித் தோள்கொண்டு
தாங்காத் துயர்கொண்டு
மண்படுகை வைத்துப்
பதினாறு ஆண்டுகள்...

என்றென்றும்
மனத் தொடுகை விடாமலே..,
அப்பா!!!

“பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலிகள்”


2012

பதினைந்தாம் ஆண்டு நினைவில்...

ஈடில்லா இணையில்லாத் தந்தையே!

நீங்கள்..,
என்றும் எம் உயிர் வாழும் உயிர்ப்பு...
என்றும் எம் உளம் கமழும் உயிர்ப் பூ...

எந்தையே!
எம் வாழ்வின் தொடக்கம் நீங்கள்.
எம் மாறா அடையாளம் நீங்கள்.

என்றென்றும்
எம் முதலெழுத்தாய்
எம் முழுவுணர்வில்
வாழும் உங்களுக்கு
எங்களின்
நினைவஞ்சலிகள்...


2010

என் உயிரின் தொடக்கம் "அப்பா"...
என் மாறா அடையாளம் "அப்பா"...
முதலெழுத்தாய் என்றும் வாழும் என் தந்தைக்குப்,
பதின்மூன்றாவது நினைவஞ்சலிகள்.., இதயவஞ்சலிகளாக...


2009

இருந்த போது ஏங்காத நெஞ்சம்.., 
இல்லாத போது தாங்காத சோகம்... 
“அன்புத் தந்தையின் 12ம் ஆண்டு நினைவுநாள்”

20 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 03

அங்கே எம்மை வரவேற்றது...

0102

ஒரு குரல். அதுவும் தமிழ்க்குரல். எப்படித் தெரிந்தது என்று நினைக்கின்றீர்களா..?

மோசமான ஒரு கெட்ட வார்த்தையைத் தமிழிற்  சொல்லி ‘வாங்கோ’ என்று மரியாதையாக வரவேற்றது அந்தக்குரல். போகப் போகத்தான் புரிந்தது, கெட்டவார்த்தைப் பிரயோகங்கள், வயது வித்தியாசமின்றி, அனைவரிடமிருந்தும், அனைவருக்கும் வரும், செல்லும் என்று. நாட்டில் நண்பர்கள் வட்டத்தில் கெட்டவார்த்தைகள், அந்த வயதில் ஒரு தொற்றாக இருந்தாலும், நண்பர் வட்டம் தாண்டி எப்போதும் வாய்விட்டதில்லை. ஆனால், இனிப் பயணம் முடியும்வரை அடைமொழிகள், வர்ணனைகள் எல்லாம் கெட்டவார்த்தைப் பிரயோகங்களில்தான் என்பது, இங்கு பதிவுகளில் இல்லாவிட்டாலும், உண்மையே. இதைப் பதிவு பண்ணுவதற்காக, வேதனைப்படவோ, வெட்கப்படவோ ஒரு வீதம் கூட மனம் தயங்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. 

நிகழ்ந்தவைகளின் உண்மை. 

என் அனுபவத்தில் இருந்து, ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஒரு மொழியைத் தெரிந்து கொள்கையில், அம்மொழியின் கெட்ட வார்த்தைகள்தான் முதலில் ஞாபகமாகி, இறுதிவரை மறக்காது இருக்கின்றன.

கண்ணில் மின்னியக் கனவுகளில், தூக்கம் தொலைந்து போயிருக்க, இருள் கவ்விய மாடிப்படிகளில் சத்தம் போடாது, மெது நடையில், இருவர் மூவராக அழைத்துச் சென்று, ஒரு வீட்டுக்குள் அழைத்து வந்தார் அந்தத் தமிழர். 

அவர் அந்த நாட்டில் இருந்த எம்போன்ற பயணிகளின், பயண முகவர்களில் ஒருவர். வீட்டினுள் மேலும் ஒரு சிலர், கட்டில்களிலும், வரவேற்பறை இருக்கையிலும் நித்திரையில் இருந்தார்கள். அதிகாலை நேரமாகையாலும், குளிரில் நனைந்த புதியவர்கள் நாம் ஆகையாலும், சுடச்சுடத் தேனீர் தந்து, புகைபிடிப்போருக்கு சிகரெட்டும் தந்து உபசரித்தார்கள். எல்லோரும் எமது நாட்டவரே... தமிழரே...

ஆகா! இதுவல்லோ வெளிநாட்டு வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் கூத்தாடியது. நித்திரை வராததால், நிலத்தில் அமர்ந்தபடி அடுத்து எங்கே அனுப்புவார்கள், எப்போது அனுப்புவார்கள் என்று, வந்தவர்கள் நாம் எமக்குள்ளேயே கதைத்தபடி, விடியலுக்காகக் காத்திருந்தோம். ஆனால், ஆறு மணி தாண்டியும் இலகுவில் வர மறுத்தது விடியல். 

அது,  நாம் அனுபவிக்கவிருந்த கருமை நாட்களைச் சுட்டிக்காட்டியதோ என்பதை, அப்போது உணரமுடியவில்லை.

எம்மை மேலே அழைத்து வந்தவரும் மீண்டும் நித்திரை செய்து எழுந்துவிட்டார். மற்றும், அனைவரும் எழுந்துவிட்டனர். ஒவ்வொருவராகச் சென்று காலைக்கடன்களை முடித்து வந்ததும், அங்கிருந்தவர்கள் எங்களது தாயக முகவர்களைப்பற்றியும், செலுத்திய பயணக் கட்டணங்களைப்பற்றியும் விசாரித்துக் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே பிரதான முகவர்களும், உப முகவர்களும் என்பதை பின்நாட்களில் அறிந்து கொண்டோம்.

அன்றைய தினம், அவர்களே சமைத்துத் தந்தார்கள். உண்டோம். ஏதோ ஒரு வித்தியாசம் சுவையில் ஒன்றிக்க விடவில்லை. தாயகத்தில், தேங்காய்ப்பால் விட்டு சமைப்பது வழக்கம். இங்கு தேங்காய் இல்லை என்பதால், பசுப்பால் அதுவும் பெட்டியில் அடைக்கப்பட்ட பால் பாவிப்பார்களாம். அதுதான் அந்த வித்தியாசம். இந்தச் சுவைகூட எங்கள் நாக்கள் மீண்டும் சுவைக்க, நீண்ட நாட்கள் வேண்டும் என்பது, அடுத்தடுத்த நாட்களில் புரிந்தது.

ஆனால், எங்கள் ஐரோப்பியக் கனவு அனைத்தையும் சகிக்க வைத்தது. கூடவே அம்மாவின் சமையல் ருசி தேடியே நாக்கும் அடங்கிப்போனது. 

அடுத்து மிக முக்கியமாக மீண்டும் நடை பழகினோம். அதாவது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்கக் கூடாது என்று பூனை போல் நடக்கக் கற்றுத் தந்தார்கள். பேச்சின் சத்தம் குறைக்கச் சொன்னார்கள். எல்லாம், தாராளமான கெட்ட வார்த்தைகளில் சகஜமாக கதைக்கப்பட்டது. என்னதான் நாம் பரிச்சயமாக இருந்தாலும், எல்லாவற்றிலும் கெட்டவார்த்தைகளா என முதலில் மிக அருவருப்பாக இருந்தது, பின்னர் பழக்கமாகிப்போனது.

பழக்கம் வழக்கமாகியும் ஆனது. 

எம்மை எல்லாம் வேறு ஒரு வீட்டில் தங்க வைக்கப் போவதாகவும், அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் சரிவந்ததும் அனுப்பி வைப்பார்கள் என்றும் சொல்லிவிட்டு, ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பல வீடுகளிலும் மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கூட பயணிக்கத் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னதும், எம்  விரைவான ஐரோப்பியக் கனவு கொஞ்சமாய்ச் சிதைந்துபோனது. இத்தனைக்கும் அடுத்த பயணத்திற்குத் தயாராக, நாங்கள் உடை மாற்றாது காத்திருந்தோம்.

ஆழம் அப்போதுதான் உணர்வில் கொஞ்சம் பட்டது. 

என்ன செய்வது? ஆழம் பார்க்காமல் காலை வைத்தபின், அதுவும் திக்குத்தெரியாத, மொழிபுரியாத இடத்தில் வைத்தபின் எப்படி எடுப்பது? ஆட்டுவார் கைப்பொம்மையாக ஆடத் தொடங்கினோம். எமது கடவுப்புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டபின், இரவாகும் வரை காத்திருந்தார்கள். இரவானதும், இரு கார்களில் எம்மை ஏற்றி ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மொத்தமாக நாம் 12 பேர். ஒரே தடவையில் இரு கார்களிலும் ஏற்றி, நடுநிசியில் கார்கள் விரைந்தன. இரு கார்களிலும் முகவர்களும் ஒவ்வொருவராக வந்தார்கள். நகரத்தினுள்ளேயே ஆளரவமற்ற இடம் ஒன்றை அடைந்து கார்கள் நின்றன. முகவர்கள் இறங்கி, (அவர்கள் ருஷ்கி உரையாடக்கூடியவர்களாய் இருந்தார்கள்) சுற்றுமுற்றும் பார்த்தபின், எம்மை நோக்கி வந்தார்கள். எம்மை சத்தம் போடாமல் இறங்கி வரப் பணித்து அழைத்துச் சென்றார்கள்.

நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

பசுமை நாடிய பயணங்கள்..! 04

14 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 02

எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...

01

பிஸ்கெக், கிர்கிஸ்தான்!

Bishkek, Kyrgyztan!

பிளவுபட்ட ரஷ்யக் குடியரசின் நாடுகளில் ஒன்றான 'கிர்கிஸ்தான்' நாட்டின், தலைநகரம்தான் 'பிஸ்கெக்' நகரம். எங்களது தலைவிதியை நீண்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டதால், எமக்கும் மிக முக்கிய தலைவிதிநகரம் ஆகிப்போனது. 

சொன்னதுபோலவே முகவர்கள், அடுத்த கட்டமாக எங்களை அங்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, எமக்குரிய அறிவுறுத்தல்களையும் தந்தேவிட்டார்கள். என்னே! ஒரு வாக்கு நாணயம்; தொழில்நேர்த்தி. ஆனால், ‘நம்பாதீர்க்ள்; இது மட்டும்தான்’ என அங்கு ஏதாவது அசரீரி முனகியாவது இருந்திருக்கலாம். வியப்பில் இதுவரைக் காத்திருந்த நாட்கள் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால், அந்த விமானம் ஏறும் கணத்திலிருந்து, ஐரோப்பாவை அடையப்  பயணிக்கப் போகும் காலம் முழுதும், கொஞ்சம் கூட நம் கட்டுப்பாட்டுக்குள் நாம் இல்லை என்பதுதான், நம்மால் அன்று புரியப்படாத உண்மை.

நாம் அங்கு செல்லவதற்காக, விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வுப் பகுதிக்குச் செல்லத் தயாராகிக் காத்திருந்த வேளையில், மூன்று நாட்களுக்கு முன்னர் பயணித்தவர்களில் ஒருவர் அங்கிருந்து திரும்பி, எம்மை நோக்கி வந்து கொண்டிருந்தார். உடனே நாம் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டோம். அவர் சொன்னார், தான் முன்னரே ரஷ்யா (மொஸ்கோ) சென்று பிடிபட்டு மீளவும் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதால், மீண்டும் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, மூன்று நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு, அடுத்த விமானத்தில் ஏற்றித் திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்று...
முதன்முதலாக ஒரு தடங்கல் உறுத்தியது.

உறுத்தியது என்னைத் தடுத்திருந்தால், என் வாழ்க்கை வேறு பாதையில் பயணித்து இருந்திருக்கலாம். 

"தீர்மானிக்கப்பட்ட வாழக்கைதான் நாம் வாழ்வது"

சிறையின் வாசம் தெரியாத எனக்கு, ரஷ்ய சிறையின் கொடுமை சமிக்ஞை தந்தது. ஒருவேளை உணவு மட்டுமே தந்ததாகக் கூறினார். அவரிடம் இருந்த பணம் முழுவதையும் பறித்துவிட்டு வெறுமனே திருப்பி அனுப்பியிருந்தனர்.

எமக்கு இன்னமும் நேரம் இருந்தது. சில நாள் பசி, எப்போதும் களையான அவரது முகத்தில், களைப்பாகத் தெரிந்தது. ஒரு அவசர உணவை, அவசரமாக வாங்கி வந்து அவரிடம் கொடுத்துவிட்டு, என்னிடமிருந்த பணத்தில் மிகச் சொற்ப தொகையை (அதிகம் கொடுக்கும் அளவு என்னிடம் இருக்கவும் இல்லை) அவரிடம் கொடுத்து அவரது நிலையை நொந்தபடியே எனது பயணத்திற்காகத் தயாரானேன். 

ஆனால் விதி.., என்னைப் பார்த்து நொந்துகொண்டது...

நாம் மற்றனைவரும் உரிய பரிசோதனைகளை முடித்ததுமே, ஐரோப்பாவை அடைந்துவிட்ட கனவுடன் விமானம் ஏறினோம்.
நாம்   இதுவரை பயணித்தவைகள்தான்  விமானங்கள். இதை  விமானம் என்று சொல்ல முடியாத, எப்படிச் சொல்வது என்றே தீர்மானிக்கவியலாத, பறந்ததால் மட்டுமே ஒரு விமானம்.
விமானம் வானேறிப், பறந்து செல்ல, நம் 'காலம் தின்னி' ஒன்றும் 
அதனுடன் சேர்ந்தெழுந்து பறந்து கொண்டிருந்ததது, எம்மால் உணரப்படவேயில்லை. பயணிகள் விமானம் என்ற பெயரில், பயணிக்க தகுதியற்ற ஒரு விமானத்தில் நாம் பயணித்தோம். வேறு வெள்ளையினத்தவரும் பயணித்திருந்தார்கள்.

விமானம், இறங்கும் நேரத்தில், விமானப் பணியாளர்கள் பின்பக்கமாக ஓடி வந்தார்கள் (நான் பின்வரிசையில்தான் அமர்ந்திருந்தேன்). எங்கே போகின்றார்கள் என்று பார்த்தால், அவர்கள் ஓடிச் சென்று பின்வரிசையில் அடுக்கப்பட்டிருந்த பயணப்பொதிகளை (அப்போதுதான் எனக்குத் தெரியும் பயணப் பொதிகள் வைக்கத் தனிப்பகுதி இல்லை என்று) கைகோர்த்து, விமானம் இறங்கும்போது முன்விழாமல் தடுத்துப் பிடித்தபடி இருந்தார்கள். (இப்பொழுது புரிந்திருக்குமே ஏன் விமானம் என்று சொல்லமுடியாது என்று நான் கூறியதன் அர்த்தம்)

இப்படியான ஒரு விமானம், எப்படி ஒரு சர்வதேச தரம் கொண்ட விமான நிலையத்திலிருந்து அனுமதிக்கப்பட்டது என்பது, இன்றுவரை எனக்குப் புரியாத ஒரு புதிர்.

ஒரு வழியாக விமானம் தரையிறங்கிக் கொண்டது. செப்டம்பர் மாதத்தின் இறுதி நாட்களாகையால், வெளிச்சென்றதுமே கடும் ஊசிக் குளிரை உணர்ந்தோம்.
என் வாழ்வின் முதல் உண்மைக் குளிர் ஸ்பரிசம்.
விமான நிலையப் பேருந்தில் ஏறி, குளிரில் உதறி நடுங்கியபடி, விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையம் என்ற பெயரில் ஒரு கட்டிடம். எமக்கு ஏற்கனவேச் சொல்லியிருந்தபடி, அந்த நாட்டவர் ஒருவர் எம்மை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். (எங்கும் பணம் விளையாடியது, அவர் விமான நிலையத்தின் இருக்கைகளின் மீதாக ஏறியிறங்கி  வந்ததிலிருந்து தெளிவாகியது). அதிகாரிகள் எமது கடவுப்புத்தகங்களை வாங்கிப், பரிசோதித்த பின்னர் எம்மை வெளியே செல்ல அனுமதித்தனர்.

வெளியே வந்ததும், எமக்கெனக் காத்திருந்த வாகனங்களில், ஒரு யுத்தகால நடைமுறை வேகத்தில், எம்மையும் திணித்து, எமது பயணப் பொதிகளையும் திணித்துப் புறப்பட்டார்கள் வாகன ஓட்டிகள். எனக்குச் சாரதிக்குப் பக்கத்து இருக்கை கிடைத்தது. தாயகத்தில் வாகனங்கள் செல்லும் பக்கத்திற்கு மறுபக்கமாக நாம் பயணித்த வாகனங்கள் சென்றமையால், மனதுக்குள் ஏதோ அந்தரம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், சாளரத்தின் வெளியே கண்களை ஓட்டினேன். வாகனத்தின் உள்ளே அதன் வெப்பமாக்கி வேலை செய்ததால், உடலில் ஏறியிருந்த குளிர் விலக, ஐரோப்பா வந்துவிடாதோ என்ற நப்பாசையுடன் கண்களை விரித்து விடுப்புப் பார்த்தபடி பயணித்தேன். சாரதி ஏதேதோ தன்போக்கில் சொல்லியபடி வந்தான் (பின்னாளில் தெரிந்து கொண்டதன்படி அவையெல்லாம் அவர்கள் மொழியின் கெட்டவார்த்தைகள்). அவர்களின் பேச்சு மொழி ருஷ்கி. எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாட முற்பட்டேன். அது அவனுக்கு விளங்கவில்லை. நாமோ ருஷ்கி என்பதை அறிந்ததேயில்லை. எனவே, என்னுடன், நான் பயணித்த மகிழுந்தில் இருந்த நான்கு தாயக உறவுகளும் மௌனமொழியால் பேசியபடி, கண்களில் எதிர்பார்ப்பைத் தாங்கியபடி பயணித்தோம்.

அந்த நேரத்தின் இருளைக் கிழித்தபடி, நகரத்தினுள் நுழைந்து, அதன் தெருக்களில் வழுக்கியபடி பயணித்த வாகனம், எங்கோ சற்றே புறநகர்ப்பகுதியை அடைந்து, அங்கே ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தின் முன் நின்றபோது, நேரம் அதிகாலை (ரஷ்ய நேரம்) மூன்று மணி இருக்கும்.

அங்கே எம்மை வரவேற்றது...

பசுமை நாடிய பயணங்கள்..! 03

11 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 01

பயணங்கள்...

உலகம் தோன்றிய நாள்முதல், மனிதன் வாழுமிடம் தேடி அலையத் தொடங்கிவிட்டான். காலப்போக்கில் அதன் வடிவங்கள் மாறினவே தவிர, பயணங்கள் முடிவதாயில்லை...

அப்படியான ஒரு பயணத்தின் நிகழ்வுகளைக், காலம் என்னிடமிருந்து முழுமையாக மறக்கடிக்கமுன் பதிவாக்க வேண்டும் என்பதற்காக, எப்போதோ பதிவாக்கத் தொடங்கிய இப்பதிவும், பயணங்கள் போன்றே முடிவதாயில்லை.

அதனால், பதிவாக்கிய வரையில் பார்வைக்குத் தர எண்ணி, குடும்பம், உறவுகள், நண்பர்களோடு, நான் பிறந்து, வளர்ந்த வவுனியா நகரைவிட்டு, இறுதியாக வெளியேறிய இதே நாளில், தரத் தொடங்குகின்றேன்.

கட்டியணைத்துத், துளிக்கண்ணீர் மறைத்துக், கைகாட்டி விடைபெற்றுத், தொடருந்து ஏறிய அன்றைய இந்த நாள், '11 செப்டம்பர் 2000'

அந்தரத்தில் சுழன்று அழகாய்ப் பவனிவரும் உலகில், எனக்கும் உலா வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் ஏது தவறு..?

எனது ஐரோப்பிய நாடு நோக்கிய நகர்வு, நான் எதிர்பார்த்திருந்த போதிலும், ஏதோ ஒரு வகையில், என்னை நானே, விரும்பியோ விரும்பாமலோ நாடு கடத்த வைத்த ஒரு முரண் நிகழ்ச்சி…

பெற்றோர், உறவுகள், நண்பர்கள் என்று அனைவரையும் விட்டுவிட்டு, நாட்டை விட்டு, நானும் ஒரு நாள், ஒரு அலுமினியப் பறவையின் வயிற்றுக்குள் தற்காலிகமான உணவாக உள்நுழைந்தேன்...

அதற்கு முன்னரான நிகழ்வுகள், பயண முகவர்களோடான கால இழுத்தடிப்புக்கள், மற்றும் தலைநகரத்தின் பாதுகாப்புத்துறை, காவலரின் இறுக்கமான கெடுபிடிகள், சுற்றிவளைப்புக்கள் என்பவற்றை வெற்றிகரமாக வெற்றிகொண்டு, வானில் மிதக்க ஆரம்பித்த அந்தக் கணம், எனது வாழ்வில் பல்வேறு அனுபவங்களையும், சூழ்நிலைகளையும் தருவதற்கான ஆரம்பக் கணம் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டிருக்கவில்லை. எனது அந்த வயதும் அதனை உணர்த்திடவில்லை.

ஒரு அதிகாலையில், இலங்கைத் தலைநகரத்தின் தலைக்குமேலே மானசீகமாக விடைபெற்றுக்கொண்டு, ஆரம்பித்த அந்தப் பயணம், முதல் விமானப் பயணம் என்பதால் பயத்தோடு சேர்ந்த குதூகலம்…

ஒரு பிரமுகர் போன்றே, எண்ணங்கள் பெருமைகொள்ள, பணியாளரின் உபசரிப்புக்களிலும், புதுசு தினுசான உணவுகளிலும், ‘அடடா வாழ்க்கை’ அட்டகாசமாக ஆரம்பமானது.

இடையில் தரித்து, விமானங்கள் மாறிய விமானநிலையங்கள் மற்றும் நாடுகள் என்பன ஓரளவு நினைவில் இருந்தாலும், அந்த இடங்களைக் குறிப்பிடாமலே போகின்றேன். ஒரே நாள் பயணத்தில், மத்தியகிழக்கிலுள்ள 4 விமானநிலையங்கள் ஊடாகப் பயணித்து, ஐந்தாவதாக ஒரு விமானநிலையத்தை அடைந்தோம். என்னுடன் என்னைப் போலவே சிலரும் பயணித்திருந்தார்கள்.

அது மத்தியகிழக்கு நாடுகளில் ஒரு முக்கியமான விமானநிலையம். அங்கு இறக்கப்பட்டு, அதன் பயணிகள் காத்திருக்குமிடத்தில் தங்கவைக்கப்பட்டோம். நம் பயணம், பணம் விளையாடும் தொழில் என்பதால், எமக்குக் கெடுபிடிகள் என்றெதுவும் இருக்கவில்லை. அங்கே காத்திருக்கும் இடத்தில், எம் போன்றே எமக்கு முன்னர் வந்த சிலரும் பல நாட்களாகக் காத்திருந்தார்கள். அவர்களின் காத்திருப்பு, என் பயணத்தின் நீட்சியைக் குறிப்பாலும் எனக்கு உணர்த்தவில்லை என்பதுதான், வெளிநாட்டு மோகத்தின் முழுமையான மன ஆக்கிரமிப்பு.  நாமும் அவர்களோடு இணைந்து காத்திருந்தது இன்னமும் 14 நாட்கள்…

காத்திருந்த அந்த விமானநிலையம், ‘ஷார்ஜா விமானநிலையம்'

விமானநிலையத்தை விட்டு வெளிச்செல்ல முடியாது. நேரத்திற்கு உண்ண அழைப்பார்கள். போய் உண்போம். வசதியான விசாலமான இருக்கைகளில் தொலைக்காட்சி பார்த்தபடியும், வருவோர் போவோரைப் பார்த்தபடியும், விமானநிலையத்துக் காட்சியறைகளைப் பார்த்தபடியும், நித்திரையிலும், காலம் கழிந்து கொண்டிருந்தது.

11 நாட்கள் முடிவில், முகவர்கள் எமக்கு முன்னரே வந்து காத்திருந்தவர்களை விமானமேற்றி அடுத்துச் செல்லவேண்டிய இடத்திற்கு அனுப்பிவைத்தார்கள். அடுத்த மூன்று நாட்களில் (மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் நாம் செல்ல வேண்டிய அந்த இடத்திற்கு விமானம் உண்டு) எம்மையும் அனுப்பிவைப்பதாகச் சொன்னார்கள். 

எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...

பசுமை நாடிய பயணங்கள்..! 02