18 May 2016

இழந்ததெல்லாம் நினைவில் இழக்காமல்...

இன்றை,
அன்று பார்த்த வானம்
கண்ணீர் வடிக்குதோ
இன்று... 

குறுக்கிக் குதறி
கதறக் கருக்கி
அழிக்கப்பட்டது
தீவிரவாதமல்ல,
தீவிரமாய்த் தமிழினம்...

மனங்களைத் தொலைத்த 
பிணங்கள்,
உயிர்களைப் பறித்த 
இத்தினங்கள்,
இனவெறியின் வெற்றி நாட்கள்...
தமிழினத்தின் வேதனை நாட்கள்...

புத்தன் பார்த்திருந்தால்,
அன்றே,
'நித்திலத்தில் இதுபோல்
எத்தினமும் வேண்டாம்'
என்றே,
சித்தம் கொண்டிருப்பான்...
பௌத்தம் கொன்றிருப்பான்...

களம் (நி)(கொ)ன்ற, 
சிங்களர் மனமும்
கலங்கும் ஒரு நாள்,
அந்த நாளை எண்ணி...

அப்போது,
மன்னிப்பு வேண்டாம்,
ஒரு பூ மட்டும் போதும்..,
ஒரு துளிக் கண்ணீரோடு...

காட்சிகளில் கண்டதையே
எம்மால்,
தாங்க முடியவில்லை...
காட்சிகளில் வாழ்ந்தவர்கள்
எப்படித் தாங்கியிருப்பார்கள்...

ஒரு குரல் மட்டும்
'ம்' என்றிருந்தால்,
அவலம்,
தென்திசையும் 
உணர்ந்திருக்கும்...

தலை வணங்குகின்றோம்...

ஏழாண்டுகள் ஆகியும்,
வாழ்வில் ஏதுமில்லாமல்..,
இழந்தவர்கள்...

தமிழீழம் மனதில் இருக்கட்டும்...
உரிமை உணர்வில் இருக்கட்டும்...
மிஞ்சிய உயிர்கள்
உயிரோடிருக்க..,
வாய்கள் மூடியே இருக்கட்டும்...

இழந்ததெல்லாம்
நினைவில் இழக்காமல்..,
இருக்கட்டும்...