06 December 2013

கருப்பு நெருப்பு.., நெல்சன் மண்டேலா..!

கம்பிகளுக்குப் பின்னிருந்து
போராடியதால்,
கருப்பின விடுதலைப்
போராளி...

காட்டுக்குள்ளிருந்து தொடர்ந்தும்
போராடியிருந்தால்
இன்றும் நீங்கள்
தீவிரவாதிதான்...

உங்களது
அஹிம்சைப் போராட்டம்
கம்பிகளுக்குள் அடைக்கப்பட,
உங்களுக்கும்
ஆயுதப் போராட்டம்தானே
எதிர்க்கும் வழியானது...

மன்னிப்புக் கேட்டால்
விடுதலை என்ற போது,
அடக்கப்பட்ட  வாழ்விலும்
அடைக்கப்பட்டு வாழ்வதே
மேலென,
இலட்சியம் இழக்க மறுத்தீர்கள்...

மாறும் போராட்ட வடிவங்களிலும்
மாறா இலட்சியம்
ஈற்றில் வெற்றி தரும்
என்பதன் சாட்சியானீர்கள்...

முத்  தசாப்தங்களுக்கு
நெருக்கமாய்
சிறைவாசமிருந்தும்
கருகிப் போகாத
கருப்பு  நெருப்பு
நெல்சன் மண்டேலா அவர்களுக்கு
அஞ்சலிகள்...

01 November 2013

பார்த்துப், பார்க்கவைத்து...

பார்த்துப், பார்க்கவைத்து...
என்று வரை..?
கலங்கலாக்கி மறைத்துச்
சாட்சிக்கான இந்தக் காட்சிகள்
என்று வரை..?
நீதி வழங்கத் துணிவில்லா உலகே..,
என் தமிழச்சிகளின்
உடலங்கள் போர்த்தச்
சிறு துணி வழங்கக்கூடத்
துப்பில்லையா உனக்கு..? 

05.01.2011


பாதவிரல்களின் வடிவம் கூட,
பூமியின் பதிவிற்தானே
புருஷனுக்கும் முழுமையாய்த்
தெரியவரும்...

ஆங்காங்கே,
நம் கலாச்சாரத்தைத் தின்னும்
கலாச்சாரங்கள் இருந்தாலும்,
பண்போடுதானே இருந்தது
நம் பண்பாடு...

பிணமானபின்னும் புணரும்
வெறிச்செயலின் சாட்சிகளான
இக்காட்சிகள் கூட
உலகின் மனச்சாட்சியை
உசுப்பவில்லை என்பது,
உலக, மனித மாட்சிக்கே
பெருங்கறையன்றோ...

குற்றவாளிகள் தப்பித்தாலும்,
நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது
என்று அறிவுறுத்தும் உலக நியதி..,
இங்கு மட்டும்,
மரணச்சாட்சிகளின்
நிர்வாணத்தைக் கூடக்
கண்டுகொள்ளாதது என்ன நீதி...

புதைகுழி தோண்டி,
மண்ணாற்கூட
உங்களை மூடமுடியாமைக்கு
வெட்கித்து,
மனக்குழிகளில் உங்களை
ஆழப்புதைக்கின்றோம்...
மன்னித்துவிடுங்கள்...

06.01.2011

http://www.channel4.com/news/fate-of-tamil-actress-chilling-new-evidence-from-sri-lanka

07 October 2013

மௌனம்

ஒரு வார்த்தை என்ன..,
ஓராயிரம் வார்த்தைகள்,
ஒரு கோடி வார்த்தைகள்
பேசிக் கொண்டாலும்
திருப்தியும் கொள்ளாது,
அடங்கியும் கொள்ளாது,
மனது...

ஏதோவொரு வரையறுக்கப்பட்ட
எண்ணிக்கைதானே வரும் வார்த்தைகள்...

மௌனம் அப்படியா...
முடிவிலியாய்
தொடர்ந்து தொடந்து
மனதும் மனதும்
பேசிக்கொள்ளுமே...

மௌனத்தை உணரத்
தேவை மௌனம்...
மௌனத்தை உணர்ந்தால்
போதும் மௌனம்...

(01.05.2012)