27 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 04

நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

010203

ஆளரவம் அற்ற நேரம்...

ஆனால், வீடுகள் செறிந்த இடம். தனித்தனியான வீடுகள். எங்கும் இருள் கவிந்து இருந்தது. எம்முடன் வந்த தமிழ் முகவர்கள், எங்களை அழைத்துச் சென்று, ஒரு வீட்டின் கதவைத் திறந்தார்கள். வீடு தெருவிலிருந்து கிட்டத்தட்ட 20 அடிகள் தள்ளி இருந்தது. கதவைத் திறந்ததுதும் உள்ளே உடனேயே இன்னுமொரு கதவும் இருந்தது. குளிர் அதிகமான நாடு என்பதால், தனி வீடுகள் இவ்வாறுதான் இரு கதவுகள், சாளரங்களுடன்  இருக்குமாம் என்று சொன்னார்கள் எமது முகவர் பாதுகாவலர்கள். 

ஒரு வழியாக உள்ளே போனதும், கதவுகளை மூடியபின் மின்விளக்குகளை ஏற்றினார்கள். உள்ளே சில தளவாடங்களுடன் வெறுமை மிக அதிகமாக இருந்தது. அடுத்த பயணத்துக்குத் தயாராக இருந்த எம்மைப்போலவே..  

எம்மிடம் நாளை வருவதாகவும், வெளியே தாங்களே பூட்டி விட்டுப் போவதாகவும் சத்தமின்றியும் , நடமாட்டம் வெளித்தெரியாது இருக்கும்படியும் கூறிவிட்டு, எமது பாதுகாவலர்கள், எம்மை வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒரு பூட்டப்பட்ட வீட்டினுள்ளே,  நம் கனவுகள் அடித்துப் பூட்டப்பட்டு,
அகலத் திறக்கப்பட்டது, எமது பசுமை நாடிய பயணத்தின் தாமதம்.., நம் அனுமதி இன்றியே...

இது புரியாமல், தெரியாமல், வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு அடுப்பு இருந்தது. (எரிவாயு அடுப்பு, 4 அடுப்புகள் கொண்டது) தேநீர் போடுவதற்குரிய பொருட்களை அப்போதுதான் கூடவே கொண்டு வந்து தந்திருந்தார்கள். கூடவே பாணும் (பாண் என்றால் Bread). சில கோப்பைகளும், மேலும் பாத்திரங்கள் சிலவும் இருந்தன. தாயகத்தை விட்டு நீண்ட நாட்கள் புறப்படுவதற்கேற்ற உடைகளுடனேயே இருந்ததால், ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று, உடை மாற்றி விட்டு, முகம் கழுவ சென்று தண்ணீரைத் திறந்தால், ஜில் என்று சிலிர்த்தது முழு உடம்பும். எமது நாட்டில், குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் நீர் குழாயினூடாக வந்து கொண்டிருந்தது. பக்கத்திலேயே இன்னுமொரு குழாய்க்கான (சுடுநீர்) திருகி இருந்தது. திருகிப் பார்த்தால் அதிலும் தண்ணீர் தண்மையான நீராகவே இருந்தது. (தண்ணீரின் அர்த்தம் அன்றுதான் புரிந்தது). எனவே, முகத்தை நனைத்துவிட்டு, வர, எங்கள் பன்னிருவரில் ஒருவர் தேநீர் ஊற்றி தரக் குடித்துவிட்டு, எமது மாளிகையை சுற்றிப் பார்த்தோம். அந்த நாட்டிற்கு, மிதமான குளிரின் ஆரம்ப நாட்களான போதும், எமக்கோ தாங்கமுடியாத குளிர். ஆனால், வீட்டில் வெப்பமாக்கிகள் வேலை செய்தபடியால், கதகதப்பாக இருந்தது.

தொலைபேசி இருந்தது. காதில் வைத்துப் பார்த்தால் சத்தம் கேட்டது. ஆனால் பழைய காலத்துத் தொலைபேசி ஆகையால், இலக்கத்தை அழுத்தும் வசதி இருக்கவில்லை. சுழற்றும் வசதி தான் இருந்தது. ஆனால், சுழற்றும் அந்த வட்டம் கழட்டப்பட்டிருந்தது. ஏனென்றால், மேலும் பல வீடுகளில் அடைபட்டிருக்கும் எம்போன்றவர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படும்போது, தொடர்பு கொண்டு அரட்டை அடிப்பதுண்டாம். வெளியில் வீணாகத் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதால், எமது பாதுகாவலர்கள் கழற்றிவிடுவதுண்டாம். பின்நாட்களில் அறிந்துகொண்டோம்.

சாளரங்கள் அனைத்தும் காகித மட்டை கொண்டு மூடப்பட்டிருந்தது. இரவில் வெளிச்சம் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடாம். இப்படியாக பாதுகாக்கப்பட்ட (?) வீடு. ஒரு வழியாகப் பின்னிரவு தாண்டும் வேளையில், கண்ணுறங்கத் தயாரானோம். படுப்பதற்கு எந்தவிதமான படுக்கைகளோ அல்லது விரிப்புக்களோ இல்லாத நிலையில், எம்முடன் நாம் கொண்டு வந்திருந்த சாறத்தை விரித்துவிட்டுப் படுத்து உறங்கினோம்.

இனி இப்படித்தான் என்பது, உண்மையில் தெரியவில்லை.

அடித்துப் போட்டாற்போல் நல்ல தூக்கம். எழும்பிப் பார்த்தால், இருட்டாகவே இருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், வெளிச்சத்தின் அனுமதி உள்நுழைய மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் தாண்டிவிட்டது. எழும்பி ஒரு வழியாக குளிர் நீரில், காலைக்கடன்களை விறைப்புடன் முடித்து, முதல்நாள் கூடவே கொண்டு வந்திருந்த பாணை, வெறும் தேநீருடன் உண்டு முடித்து விட்டு, ஊர்க்கதை பேசிக் கொண்டும், அடுத்த எம் பயணம் பற்றிப் பேசிக் கொண்டும், படுத்தும்,  அமர்ந்தும் நேரத்தை ஒட்டினோம்.

இடையே சிறிதாக மறைவை விலக்கி வெளியே நோட்டம் விட்டோம். வீட்டின் சுவர் முழுவதும், முந்திரிகைக்கொடி படர்ந்து, கனிகள் குலைகுலையாகத் தொங்கிக் கொண்டிருந்தன. நாவூற, வாயூற, அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், ஜன்னலைத் திறந்து, பறிப்போம் என்றால், ஜன்னல் முழுவதுமாக சுவருடன் பொருந்தியிருந்தது. மேலே ஒரு சிறு சதுரப் பகுதி மட்டுமே திறக்க முடிந்தது. அடுத்தடுத்து இரு தடித்த கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. (குளிர் வருவதைத் தடுக்க). அந்த சிறிய ஜன்னல் திறப்பினூடாக, ஓரிரண்டு முந்திரிக் குலைகளை வெற்றிகரமாகப் பறித்துப், பகிர்ந்து உண்டோம்.

இரவும் மீண்டும் வந்தது. ஆனால், வருவதாகச் சொல்லிச் சென்றோரைக் காணவில்லை. முதற்பயணம் ஆகையால், எனக்கு மனதில் பயம் பிடித்துக் கொண்ட்து. ஆனால், வந்த உறவுகளில் சிலர், முன் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் வேறு நாடுகளூடாகப் பயணம் செய்ய முயன்று, பிடிபட்டு, நாடு திருப்பப்பட்டு, இவ்வழியாக முயற்சிப்பவர்கள். ஓரிருவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் தைரியம் தர, சிறிது பயம் களைந்து காத்திருந்தோம். பசிக்கத் தொடங்கிவிட்டது. தேநீர் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

இருள் நன்றாகக் கவிந்து வந்த அந்தச் சமயத்தில்..,

வெளியே ஒரு சத்தம்... உற்றுக் கேட்டால் ஒன்றல்ல, பல பாதணிகளின் சத்தம்…

வரவர நெருங்கின. இனம்புரியாத பயத்துடன், மூச்சின் சத்தமும் வெளியே கேட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கதவைப் பார்த்தபடி அனைவரும் நின்றிருந்தோம். எமது வீட்டுக் கதவு திறந்தது. எமது முகவர்கள் உள்ளே வந்தார்கள். எம்மில் இருவரை வெளியே வருமாறு சொல்ல, அவசரமாக பாதணிகளையும், குளிர் உடைகளையும் (Jackets) அணிந்தபடி, இருவர் சென்றார்கள். மீண்டும் உள்ளே ஒரு மூட்டையுடன் நுழைந்து வைத்துவிட்டு, மீண்டும் மீண்டும் சென்று சில மூட்டைகளைச் சுமந்து வந்தார்கள்.

முகவர்கள் சொன்னார்கள்,  உணவுப் பொருட்கள் என்று. சமைத்துச் சாப்பிடுமாறு சொன்னார்கள். மேலும் தொலைபேசி மூன்று தடவைகள் அடித்து நின்று மீண்டும் ஒலித்தால், அழைப்புக்குப் பதிலளிக்குமாறு கூறிவிட்டு, மீண்டும் அடுத்த நாள் வருவதாகச் சொல்லிச் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தோம். மா, அரிசி, கத்தரிக்காய், கோவா, கரட், வெங்காயம் என்று ஒவ்வொன்றும் மூட்டை மூட்டையாக வந்து இருந்தன. அத்தோடு எண்ணை, சிறிய மிளகாய்த்தூள் போத்தல், உள்ளி போன்ற இதர பொருட்கள் வேறொரு பையிலும் இருந்தன. அவற்றோடு, சிகரெட், சீட்டுக்கட்டு என்பவற்றையும் கொண்டு வந்து தந்திருந்தார்கள்.

இவற்றின் வகை தொகை, பசியையும் மீறி நாம் நிற்க வேண்டிய கால அளவைக் காட்டி அச்சப்படுத்தியது. நாளை எமது பயணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன், எல்லோருமாகச் சேர்ந்து சமைக்கத் தொடங்கினோம். பலருக்குச் சமையல் பழக்கமற்ற போதிலும், தெரிந்த சிலரும் நம்முடன் இருந்ததால், அவர்கள் சமைக்க, நாம் உதவி செய்தோம். ஒரு வழியாக, சோறு சமைத்து உண்டுவிட்டு, சீட்டுக்கட்டை எடுத்து விளையாடினோம். விளையாடத் தெரியாதவரும், விருப்பமில்லாதவரும் அருகே இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக அன்றைய தினமும், முடிந்து அடுத்த நாளும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்து (வேறு என்னதான் செய்வது..?) காலத்தை ஓட்டினோம். இரவானதும், தொலைபேசி ஒலித்து நின்று மீண்டும் ஒலித்தது. எம்மில் ஒரு நண்பர் எடுத்துக் கதைத்தார். மேலும் சிலர் வருவார்கள் என்றும், அவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிக்குமாறும் சொன்னார்கள். அன்று இரவும் சோற்றையே சமைத்தோம். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இதற்கிடையே ஒரு ஜன்னல் இடைவெளியூடாக வெளிப்படலையைப் பார்க்ககூடியதாக சிறிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தோம்.

நடுநிசி அளவில், வாகனச் சத்தம் கேட்டது. எமது படலையின் முன்னால் நின்றதும், நாம் முன் வாசலைச் நோக்கிச் சென்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கதவு திறந்தது, புதிதாக நான்கைந்து நபர்கள் வந்தார்கள். ஆனால், அவர்கள் நடை, உடை, பாவனைகள், தோரணைகளில், பயணிகள் மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் உள்ளே வந்ததும் கதவைமூடி விட்டு அனைவரையும் வரவேற்பறைக்கு செல்லுமாற கட்டளையாகக்  கூறினார்கள். நாமும் போய் அமர்ந்தோம். அதிலொருவர் கதைக்கத் தொடங்கினார். அவர்தான் அந்த நாட்டில் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்யும் முக்கிய முகவர். எல்லோருடைய பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்பின் சொன்னார், தற்போது பயண வழிகள் பிரச்சினைக்குரியதாக தடைப்பட்டு இருப்பதால், சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றார். எவ்வளவு காலம் என்று கேட்டதற்கு அவர் சொன்னார், மூன்று மாதங்களுக்கு மேலாக 90 பேருக்கு மேல், பயணிக்க முடியாமல் இந்த நாட்டில் தங்கியுள்ளார்கள். நீங்கள் இப்போதுதானே வந்தீர்கள், பொறுத்திருங்கள் என்று கூறுவது போலக் கட்டளையிட்டார். நம்முடன் வந்த ஒரு நண்பர், அப்படிக் காலம் எடுக்குமானால், தன்னை தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு கூற, முகவர் சொன்னார், இங்கு வந்தால், திரும்பச் செல்ல முடியாது, குழப்பம் செய்தால் உணவும் வராது, ஆதலால் அமைதியாக அனுப்பும்வரை இருங்கள் என்றார்.

அப்போதுதான் முகவர்களின் சுயரூபம் வெளியே தெரியத் தொடங்கியது. அவர் தனது (அன்றைய காலத்தில்) விலையுயர்ந்த  அலைபேசியில், எங்கோ தொடர்பெடுத்து, ஒரு சிலர் பெயரைக் குறிப்பிட்டு, இந்த வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் நால்வரை ஒரு துணைமுகவர் அழைத்து வந்தார். அவர்களையும் எம்முடன் தங்குமாறு கூறிவிட்டு, எல்லா முகவர்களும் புறப்படத் தயாரானார்கள். அப்போது நான் சொன்னேன் வீட்டிற்கு (தாயகத்திற்கு) உரையாட வேண்டுமென்று. நாளை அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதாகக் கூறிவிட்டு, வந்தவர்களில் ஒருவரை எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும்படியும், தொலைபேசிக்கு அவரை மட்டுமே பதிலளிக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுவிட, எம்மத்தியில் கனத்த அமைதி சிறிது நேரத்திற்கு நிலவியது.

அப்போது, புதிதாய் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்தார்கள்...

விரைவாகத் தொடரவேண்டும்...