10 September 2014

பிறந்த நாளா... பிரிந்த நாளா...

1979 இல்,
பிறந்தபோது தெரியவில்லை,
அறியாமல் பிரிந்தேன்...

2000 இல்,
பிரிந்தபோது புரியவில்லை,
அறியாமையில் பிறழ்ந்தேன்...

இப்போதோ..,
தெரிகின்றது மனதில் வலி,
புரிகின்றது மனதின் வலிமை,
எனதல்ல..,
தாயது...

இராமனுக்கோ
பதினான்காண்டுகள் வனவாசம்,
இம்மகனுக்கோ இன்றோடு
பதினான்காண்டுகள் வெளிவாசம்.
இராமனுக்கு முடிந்தபோதும்,
எனக்கோ,
இன்னமும் முடியவில்லையே...

வாழக் கிடைத்த வாழ்க்கை
ஒன்றில்,
வாழ்க்கை தந்த வலிகள்
அதிகம்தான்...

நீங்கள் இன்று தந்த வாழ்த்துக்கள்,
நான் என்றும் தந்த வலிகளுக்கு,
மன்னிப்பாகட்டும்...

உங்கள்
தரிசனமும் ஸ்பரிசமும்
இப்பிறந்த வருஷமேனும்
பரிசாய் மீண்டும் கிட்டடட்டும்..,
அம்மா...!!!

21 May 2014

சுதந்திர நாடென்றுதான் ஆகும்...

சுதந்திர நாடென்றுதான் ஆகும்,
சுதந்திர நாடொன்றில்
வாழாதவரைக்கும்...

சுதந்திர நாடு என்றுதான் ஆகும்..?

சுதந்திரமாய் இருப்பதாய் நினைப்பது,
கிணற்றுத் தவளையின் தப்பல்ல..,
கிணற்றிலிருந்து தப்பவியலா நிலை...

புலம்பெயர் வாழ் தமிழர்
சுதந்திரத் தமிழர் அல்ல...
சுதந்திர நாடொன்றில்
வாழும் தமிழர்...

இனங்கள் சேர்ந்து வாழ்வது,
நம்மால் இயலா நிலை அல்ல...
ஆனால்,
பிணம் தின்னும் இனங்களோடு
சேர்ந்து வாழ்வது,
நமது இயலா நிலை அல்லவா...

இயல் தொலைத்து,
முகாரியும்
மனதுக்குள் இசைத்து,
நாடகமாய் வாழும் தமிழருக்கு,
நாடு அகமாய் என்று ஆகும்..?