15 February 2012

இது அழகான நினைவல்ல..! அழுத்தமான நிகழ்வு..!!

பயணங்களில் இன்னுமொரு பக்கமுண்டு. ஈழத்தமிழர் கூடுதலாக அனுபவித்திருக்கிறார்கள். இன்றும், அனுபவிக்கின்றார்கள். புலம்பெயரும் பயணத்தின்போது அனுபவிக்கும் இன்னல்கள், சொல்லில் வடிக்க முடியாதவை.

அப்படியொரு பயணத்தில், என் கண்முன்னே போயின இரு உயிர்கள்...
மொஸ்கோவிலிருந்து உக்ரேன் போகும் வழியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு இது...
பனி மூடிய நீர்ப்பரப்பில், நெஞ்சளவு நீரில், நீண்ட தூரம், நீண்ட நேரம், மறைக்குளிரில் நடந்தபோது வந்த வேதனை இது...

15 பெப்ரவரி 2002 இல்,அந்தத் துக்கநிகழ்வு நடந்தபின், குளிரின் விறைப்பினின்றும் ஓரளவு உடல்தேறி, ஒரு மாதத்தின் பின் எழுதியதை, மரணித்த அந்த உயிர்களுக்காகச் சமர்ப்பணம் செய்கின்றேன்...

இது அழகான நினைவல்ல..!
அழுத்தமான நிகழ்வு..!!
(15.02.2002 02:00-03:30)

காதலர் தினம்
தாண்டிய
அந்த நள்ளிரவு..,
இரு கல்லறைகள்
புதிதாய்ப் பூமியில்
எழுந்தன...
இதயத்தை
உடைத்துவிட்ட
அந்தக்
கறுப்பு நிமிஷங்களுக்கு..,
பனிக்குளிரும் காற்றும்
கட்டியம் கூறி
நின்றன...

அந்தக்
குளிர்மையின் உச்சத்திற்கு
முகம் கொடுக்க முடியாத
இரு ஆத்மாக்கள்..,
புத்துலகம் தேடிப்
பறந்து போயின...
கனவுகளும்
எதிர்பார்ப்புகளும்
அவர்களுக்கு
கானல் நீராகிப் போயின...

அன்புத் தோழர்களே..!
அப்பன், அன்பழகன்
என்ற நாமங்கள், இனி
யாரை
உரிமை கூறி நிற்கும்..?
பழகிய
உள்ளங்கள் நாங்களே
கலங்கிப் போயல்லவா,
நிற்கின்றோம்...
உங்கள்
இரத்த உறவுகள்
எங்கெங்கோ
கதறியல்லவா நிற்கும்..!

உங்கள் திருமுகங்கள்
அந்நிய நாட்டின்
புதைகுழிகளுக்குள்
விழிமூடிப் போனதேன்..?

உம்மைச்
சுமக்க முடியாமற் போன
எம்மை நினைக்கையில்
வெட்கமும், வேதனையும்
சேர்ந்து நின்று
வாட்டுகின்றன...

மறைந்து போன
தோழர்களே..!
எங்களை
மன்னித்து விடுங்கள்..,
உங்களை மட்டும்
விட்டுவிட்டு
நாம் மட்டும்
நழுவி விட்டதற்கு...

உங்கள்
நினைவுகளைச் சுமந்தபடி..,
இனிவரும்
பெப்ரவரி பதினைந்துகள்..,
எம்மை
நாடி வரும்...

உங்கள்
சுவாசம் கலந்த
இந்தக் காற்று...
உங்களைத்
தினம்தினம் எமக்குள்
கொண்டுவரும்...

8 comments:

  1. எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி...

    உயிரும் உடலும் விறைத்த
    அந்தக் கணம்,
    இன்னமும் உறைந்த நிலையில் என் மனதில்......

    அந்த நாளுக்கு நினைவு செல்கையில்,
    மனம் உதறும்... கண் கலங்கும்...

    ஆத்மாக்களே!
    உங்களுக்கு என் இதய அஞ்சலிகள்...

    அப்பன் என்கின்ற ஜெயக்குமார்!
    எனக்கு நீச்சல் தெரியாது, பயணத்தில் ஆறு குறுக்கிட்டால் எப்படிக் கடப்பது என நான் பயந்தபோது,
    என்னுடன் ஒத்துழை, உன் முடியைப் பற்றி நான் அழைத்துச் செல்வேன்
    என்றவன்.
    அந்த உறுதியான மனத்தினனை, மரணம் ஏன் ஜெயம் கொண்டது...

    கிளிநொச்சியைச் சேர்ந்த அன்பழகன்!
    தன் அன்பு மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்த ஏக்கம்,
    அதனால் ஏற்படும் சோகம் எப்பொழுதும் பிரதிபலிக்கும் முகம்.
    ஆஜானுபாகுவான அன்பழகன்,
    மரணித்தபின்னும் வள்ளலானவன்.
    விறைப்பிற் பாதணி கழன்றதறியாது தொலைத்துவிட்ட ஒருவனுக்கு இறந்தபின் தன் பாதணி தந்தவன்.
    அவனுக்கு ஏன் மரணம் இரக்கம் காட்டவில்லை...

    இவர்கள் போல் எத்தனையோ பேர்.
    ஆனாலும இவர்கள், கண்முன்னே மரத்து மறைந்ததால்,
    என் மனதில் மறையாமலே...

    உங்கள் உறவுகள் இன்னமும் உங்களைத் தேடி அலைவார்களோ...
    உங்கள் வருகைக்காக நம்பியிருப்பார்களோ...
    இந்த வேதனை, உங்கள் மரணத்தையும் மேவி,
    என் மனதில்...

    உங்கள் ஆத்ம சாந்திக்காகவும், உங்களை இழந்த உறவுகளின் ஆறுதலுக்காகவும்
    இறைவனை இறைஞ்சுகின்றேன்...

    ReplyDelete
  2. ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி...

    நிஜத்திற் செய்ய முடியாதுபோன
    அடக்கத்தினை,
    நினைவிற் செய்துவைத்தேன்.
    அந்த நினைவுச் சமாதியில்,
    வார்த்தைகள் தூவி
    அஞ்சலிக்கின்றேன்.

    ஆண்டுகள் ஒன்பதில்,
    அப்பன்..! அன்பழகனே..!
    உங்கள் உடலங்கள் உக்கியிருக்கும்.
    உங்கள் உயிர்கள் நித்தியமடைந்திருக்கும்.
    ஆனால்,
    என் நினைவில் உயிர்ப்பாய் நீங்கள்...

    வலிமையிழந்த
    அக்கணத்தின்
    வலிகளுடன்,
    அஞ்சலிக்கின்றேன்...

    ஒன்பதாம் ஆண்டு நினைவில்
    என் இதயவஞ்சலிகள்...

    ReplyDelete
  3. பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி...

    பத்து ஆண்டுகள்...
    ஒரு தசாப்தம்...

    உம் உறைந்த நினைவுகள்
    இன்னமும்
    என் மனம்விட்டு உருகவில்லை...

    எழுத்துப்பூக்கள் தூவி
    மௌனகீதமிசைத்து
    உம்மை நினைக்கின்றேன்...

    உங்கள் அகால மரணம்,
    எத்தனை தசாப்தம் கடந்தாலும்
    என் துயர் தணிக்காது...

    ஒவ்வோர் வருடமும்
    நீங்கள் இறந்த இதேநாள்தான்
    நான் மறுபடி பிறந்தநாள்...

    மறக்க முடியாத வலி நாள்...
    மறக்க விரும்பாத துயர நாள்...

    உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்,
    என் இதயவஞ்சலிகளோடு...
    உங்களை இழந்த உறவுகளுக்காகப் பிரார்த்திக்கின்றேன்,
    என் இதயவாறுதல்களோடு...

    ReplyDelete
  4. 12ம் ஆண்டு நீங்கா நினைவுகளில்...
    மடிந்திருந்தால்
    நானும் இன்று உங்களோடு...
    மடியாததால்
    நீங்கள் என்றென்றும் என்னோடு...

    ReplyDelete
  5. பதின்மூன்றாம் ஆண்டு நினைவில்...
    நனையுது மனம்...

    மனதுக்கு விழி உள்ளதோ
    கண்ணீர் உகுக்க,
    எனத் தெரியவில்லை...
    ஆனால்,
    மனதுக்குள் வலி நிரம்பவே உள்ளது
    கண்ணீர் சுரக்க...

    வேதனை மிகுந்த இழக்க விரும்பா
    நினைவுகளில்
    என்றும் அப்பன்..! அன்பழகன்..!

    அஞ்சலிகள்!!!

    ReplyDelete
  6. மன நினைவில் நீங்கா
    அப்பன்! அன்பழகன்!
    நீவிர் நீங்கிய
    கன நிகழ்வும் நீங்கா
    என் மனம் விட்டு...

    குளிர் பிடித்து
    குளிரிற் குளிர்காய்ந்த
    தருணத்தில்,
    மரணத்தில்
    நீவிர் வைத்த சூடு,
    இந்நாளின்
    என்றும் அழியாத வடு...

    பதினான்காம் ஆண்டு
    நினைவஞ்சலிகள்!

    ReplyDelete
  7. வாழ்வைத் தேடிய பயணம்...

    தேடியது கிடைத்துத்தான்,
    இம்மை வாழ்வை முடித்தீர்களோ...

    இன்னமும்
    தேடியபடி நான் இங்கே...

    அப்பன், அன்பழகன்...

    பதினேழாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

    ReplyDelete
  8. 19ம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

    அப்பன், அன்பழகன்...

    காலத்தின்
    கடுகதி ஓட்டத்திலும்,
    நீங்களும்,
    என்றும் நீங்காமல்
    கண் நனைவில்,
    என் நினைவில்...

    ஆழ்ந்த இரங்கல்களும், இதய அஞ்சலிகளும்...

    ReplyDelete