18 November 2016

தாய்மொழி

பள்ளி முன்னோடி, முகநூல் நண்பன்,
முகநூலில் வைத்த கேள்விக்கான,
எனது இன்றைய பின்னூட்டங்களின் தொகுப்பு...


வலிகள் நேரும்போதெல்லாம்,
அழைக்கப்படும்,
தாய்மொழியூடான தாயின்
வலிமைக்கு நிகரான ஒலி,
வேறேதும் இல்லை. 

ஆனால், வரைவிலக்கணம் என்றால்...
🤔

தொப்புள்கொடியூடாக கடத்தப்படுவது,
உயிர் மட்டுமல்ல, உணர்வும் கூட...
அந்த உணர்வுகளை வெளிப்படுத்த, எந்த மொழி திணிப்பின்றி இயல்பாக வெளிப்படுகின்றதோ, அதுவே தாய்மொழி. 

தாய் பேசும் மொழி, தாய்மொழி என்பதை, என்னால் ஏற்க இயலாது. 

வாய் பேச இயலாதவர்களுக்கும்,
தாயின் மொழி பேசத் தெரியாதவர்களுக்கும்,
தத்தெடுக்கப்பட்டு வாழ்வை வேறெங்கோ வாழ்பவருக்கும்,
தாயின் மொழி, எப்படித் தாய்மொழி ஆகும்?

தாயின் மொழி,
தாய்மொழியாகக் 
கிட்டுவது பேறு என்றால்,
தாய்மொழி
தமிழ்மொழியாகக்
கிடைப்பது பெரும்பேறு என்பேன். 

ஆனால்,
தாய்மொழி என்பதற்கு வரைவிலக்கணம்,
எனக்குத் தெரியவில்லை...

புலம்பெயர்ந்தோ புலம்பெயராமலோ,
சூழ்நிலையாலோ வீண்பெருமையாலோ,
தாயின் மொழி, தாய்மொழி ஆகக் கிடைக்காதிருப்பது,
'சாபம்'

ஒரு நேரம் தமிழருக்கென ஓர் தேசம் அமைந்தால்,
சிலவேளைகளில்
தமிழ்மொழி அகழ்ந்தெடுக்கப்படவேண்டிய,
கவலைக்குரிய நிலை வரலாம். 

எம்மொழியில் வாழ்ந்தாலும், படித்தாலும்,
தமிழருக்குத்,
தமிழ்மொழியைத் தாய்மொழியாக்குவது,
நம் கடமை, பொறுப்பு,
இதர.., இதர...

இப்போதெல்லாம் பேனா கொண்டு, 
'தமிழ்' எழுத முற்படுகையில்,
'tamiz' என வருவது,
கணினித் தொழில்நுட்பம் தமிழுக்குத் தந்த வளர்ச்சி அல்ல. 

கணினியில் தமிழ் வளர்வது அவசியம். 
கணினியில் மட்டுமே வளர்வது அவசியம் மாறவேண்டியதொன்று. 

காகிதத்தில் தமிழ் எழுத்து,
உருவாய் இருக்கும்வரையிற்தான்,
கணினியில் தமிழ்,
எழுத்துருவாய் இருக்கும். 

பேச்சு மட்டுமல்ல,
கை எழுத்தும்,
சந்ததிக்குக் கடத்தப்படவேண்டியது,
மிக மிக மிக அவசியம்...

எனக்கு இதுவரையில் இந்த அ(கே)வலநிலை வரவில்லை. 
வரவும் விடமாட்டேன்.

No comments:

Post a Comment