20 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 03

அங்கே எம்மை வரவேற்றது...

0102

ஒரு குரல். அதுவும் தமிழ்க்குரல். எப்படித் தெரிந்தது என்று நினைக்கின்றீர்களா..?

மோசமான ஒரு கெட்ட வார்த்தையைத் தமிழிற்  சொல்லி ‘வாங்கோ’ என்று மரியாதையாக வரவேற்றது அந்தக்குரல். போகப் போகத்தான் புரிந்தது, கெட்டவார்த்தைப் பிரயோகங்கள், வயது வித்தியாசமின்றி, அனைவரிடமிருந்தும், அனைவருக்கும் வரும், செல்லும் என்று. நாட்டில் நண்பர்கள் வட்டத்தில் கெட்டவார்த்தைகள், அந்த வயதில் ஒரு தொற்றாக இருந்தாலும், நண்பர் வட்டம் தாண்டி எப்போதும் வாய்விட்டதில்லை. ஆனால், இனிப் பயணம் முடியும்வரை அடைமொழிகள், வர்ணனைகள் எல்லாம் கெட்டவார்த்தைப் பிரயோகங்களில்தான் என்பது, இங்கு பதிவுகளில் இல்லாவிட்டாலும், உண்மையே. இதைப் பதிவு பண்ணுவதற்காக, வேதனைப்படவோ, வெட்கப்படவோ ஒரு வீதம் கூட மனம் தயங்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. 

நிகழ்ந்தவைகளின் உண்மை. 

என் அனுபவத்தில் இருந்து, ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஒரு மொழியைத் தெரிந்து கொள்கையில், அம்மொழியின் கெட்ட வார்த்தைகள்தான் முதலில் ஞாபகமாகி, இறுதிவரை மறக்காது இருக்கின்றன.

கண்ணில் மின்னியக் கனவுகளில், தூக்கம் தொலைந்து போயிருக்க, இருள் கவ்விய மாடிப்படிகளில் சத்தம் போடாது, மெது நடையில், இருவர் மூவராக அழைத்துச் சென்று, ஒரு வீட்டுக்குள் அழைத்து வந்தார் அந்தத் தமிழர். 

அவர் அந்த நாட்டில் இருந்த எம்போன்ற பயணிகளின், பயண முகவர்களில் ஒருவர். வீட்டினுள் மேலும் ஒரு சிலர், கட்டில்களிலும், வரவேற்பறை இருக்கையிலும் நித்திரையில் இருந்தார்கள். அதிகாலை நேரமாகையாலும், குளிரில் நனைந்த புதியவர்கள் நாம் ஆகையாலும், சுடச்சுடத் தேனீர் தந்து, புகைபிடிப்போருக்கு சிகரெட்டும் தந்து உபசரித்தார்கள். எல்லோரும் எமது நாட்டவரே... தமிழரே...

ஆகா! இதுவல்லோ வெளிநாட்டு வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் கூத்தாடியது. நித்திரை வராததால், நிலத்தில் அமர்ந்தபடி அடுத்து எங்கே அனுப்புவார்கள், எப்போது அனுப்புவார்கள் என்று, வந்தவர்கள் நாம் எமக்குள்ளேயே கதைத்தபடி, விடியலுக்காகக் காத்திருந்தோம். ஆனால், ஆறு மணி தாண்டியும் இலகுவில் வர மறுத்தது விடியல். 

அது,  நாம் அனுபவிக்கவிருந்த கருமை நாட்களைச் சுட்டிக்காட்டியதோ என்பதை, அப்போது உணரமுடியவில்லை.

எம்மை மேலே அழைத்து வந்தவரும் மீண்டும் நித்திரை செய்து எழுந்துவிட்டார். மற்றும், அனைவரும் எழுந்துவிட்டனர். ஒவ்வொருவராகச் சென்று காலைக்கடன்களை முடித்து வந்ததும், அங்கிருந்தவர்கள் எங்களது தாயக முகவர்களைப்பற்றியும், செலுத்திய பயணக் கட்டணங்களைப்பற்றியும் விசாரித்துக் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே பிரதான முகவர்களும், உப முகவர்களும் என்பதை பின்நாட்களில் அறிந்து கொண்டோம்.

அன்றைய தினம், அவர்களே சமைத்துத் தந்தார்கள். உண்டோம். ஏதோ ஒரு வித்தியாசம் சுவையில் ஒன்றிக்க விடவில்லை. தாயகத்தில், தேங்காய்ப்பால் விட்டு சமைப்பது வழக்கம். இங்கு தேங்காய் இல்லை என்பதால், பசுப்பால் அதுவும் பெட்டியில் அடைக்கப்பட்ட பால் பாவிப்பார்களாம். அதுதான் அந்த வித்தியாசம். இந்தச் சுவைகூட எங்கள் நாக்கள் மீண்டும் சுவைக்க, நீண்ட நாட்கள் வேண்டும் என்பது, அடுத்தடுத்த நாட்களில் புரிந்தது.

ஆனால், எங்கள் ஐரோப்பியக் கனவு அனைத்தையும் சகிக்க வைத்தது. கூடவே அம்மாவின் சமையல் ருசி தேடியே நாக்கும் அடங்கிப்போனது. 

அடுத்து மிக முக்கியமாக மீண்டும் நடை பழகினோம். அதாவது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்கக் கூடாது என்று பூனை போல் நடக்கக் கற்றுத் தந்தார்கள். பேச்சின் சத்தம் குறைக்கச் சொன்னார்கள். எல்லாம், தாராளமான கெட்ட வார்த்தைகளில் சகஜமாக கதைக்கப்பட்டது. என்னதான் நாம் பரிச்சயமாக இருந்தாலும், எல்லாவற்றிலும் கெட்டவார்த்தைகளா என முதலில் மிக அருவருப்பாக இருந்தது, பின்னர் பழக்கமாகிப்போனது.

பழக்கம் வழக்கமாகியும் ஆனது. 

எம்மை எல்லாம் வேறு ஒரு வீட்டில் தங்க வைக்கப் போவதாகவும், அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் சரிவந்ததும் அனுப்பி வைப்பார்கள் என்றும் சொல்லிவிட்டு, ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பல வீடுகளிலும் மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கூட பயணிக்கத் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னதும், எம்  விரைவான ஐரோப்பியக் கனவு கொஞ்சமாய்ச் சிதைந்துபோனது. இத்தனைக்கும் அடுத்த பயணத்திற்குத் தயாராக, நாங்கள் உடை மாற்றாது காத்திருந்தோம்.

ஆழம் அப்போதுதான் உணர்வில் கொஞ்சம் பட்டது. 

என்ன செய்வது? ஆழம் பார்க்காமல் காலை வைத்தபின், அதுவும் திக்குத்தெரியாத, மொழிபுரியாத இடத்தில் வைத்தபின் எப்படி எடுப்பது? ஆட்டுவார் கைப்பொம்மையாக ஆடத் தொடங்கினோம். எமது கடவுப்புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டபின், இரவாகும் வரை காத்திருந்தார்கள். இரவானதும், இரு கார்களில் எம்மை ஏற்றி ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மொத்தமாக நாம் 12 பேர். ஒரே தடவையில் இரு கார்களிலும் ஏற்றி, நடுநிசியில் கார்கள் விரைந்தன. இரு கார்களிலும் முகவர்களும் ஒவ்வொருவராக வந்தார்கள். நகரத்தினுள்ளேயே ஆளரவமற்ற இடம் ஒன்றை அடைந்து கார்கள் நின்றன. முகவர்கள் இறங்கி, (அவர்கள் ருஷ்கி உரையாடக்கூடியவர்களாய் இருந்தார்கள்) சுற்றுமுற்றும் பார்த்தபின், எம்மை நோக்கி வந்தார்கள். எம்மை சத்தம் போடாமல் இறங்கி வரப் பணித்து அழைத்துச் சென்றார்கள்.

நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

பசுமை நாடிய பயணங்கள்..! 04

1 comment: