11 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 01

பயணங்கள்...

உலகம் தோன்றிய நாள்முதல், மனிதன் வாழுமிடம் தேடி அலையத் தொடங்கிவிட்டான். காலப்போக்கில் அதன் வடிவங்கள் மாறினவே தவிர, பயணங்கள் முடிவதாயில்லை...

அப்படியான ஒரு பயணத்தின் நிகழ்வுகளைக், காலம் என்னிடமிருந்து முழுமையாக மறக்கடிக்கமுன் பதிவாக்க வேண்டும் என்பதற்காக, எப்போதோ பதிவாக்கத் தொடங்கிய இப்பதிவும், பயணங்கள் போன்றே முடிவதாயில்லை.

அதனால், பதிவாக்கிய வரையில் பார்வைக்குத் தர எண்ணி, குடும்பம், உறவுகள், நண்பர்களோடு, நான் பிறந்து, வளர்ந்த வவுனியா நகரைவிட்டு, இறுதியாக வெளியேறிய இதே நாளில், தரத் தொடங்குகின்றேன்.

கட்டியணைத்துத், துளிக்கண்ணீர் மறைத்துக், கைகாட்டி விடைபெற்றுத், தொடருந்து ஏறிய அன்றைய இந்த நாள், '11 செப்டம்பர் 2000'

அந்தரத்தில் சுழன்று அழகாய்ப் பவனிவரும் உலகில், எனக்கும் உலா வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் ஏது தவறு..?

எனது ஐரோப்பிய நாடு நோக்கிய நகர்வு, நான் எதிர்பார்த்திருந்த போதிலும், ஏதோ ஒரு வகையில், என்னை நானே, விரும்பியோ விரும்பாமலோ நாடு கடத்த வைத்த ஒரு முரண் நிகழ்ச்சி…

பெற்றோர், உறவுகள், நண்பர்கள் என்று அனைவரையும் விட்டுவிட்டு, நாட்டை விட்டு, நானும் ஒரு நாள், ஒரு அலுமினியப் பறவையின் வயிற்றுக்குள் தற்காலிகமான உணவாக உள்நுழைந்தேன்...

அதற்கு முன்னரான நிகழ்வுகள், பயண முகவர்களோடான கால இழுத்தடிப்புக்கள், மற்றும் தலைநகரத்தின் பாதுகாப்புத்துறை, காவலரின் இறுக்கமான கெடுபிடிகள், சுற்றிவளைப்புக்கள் என்பவற்றை வெற்றிகரமாக வெற்றிகொண்டு, வானில் மிதக்க ஆரம்பித்த அந்தக் கணம், எனது வாழ்வில் பல்வேறு அனுபவங்களையும், சூழ்நிலைகளையும் தருவதற்கான ஆரம்பக் கணம் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டிருக்கவில்லை. எனது அந்த வயதும் அதனை உணர்த்திடவில்லை.

ஒரு அதிகாலையில், இலங்கைத் தலைநகரத்தின் தலைக்குமேலே மானசீகமாக விடைபெற்றுக்கொண்டு, ஆரம்பித்த அந்தப் பயணம், முதல் விமானப் பயணம் என்பதால் பயத்தோடு சேர்ந்த குதூகலம்…

ஒரு பிரமுகர் போன்றே, எண்ணங்கள் பெருமைகொள்ள, பணியாளரின் உபசரிப்புக்களிலும், புதுசு தினுசான உணவுகளிலும், ‘அடடா வாழ்க்கை’ அட்டகாசமாக ஆரம்பமானது.

இடையில் தரித்து, விமானங்கள் மாறிய விமானநிலையங்கள் மற்றும் நாடுகள் என்பன ஓரளவு நினைவில் இருந்தாலும், அந்த இடங்களைக் குறிப்பிடாமலே போகின்றேன். ஒரே நாள் பயணத்தில், மத்தியகிழக்கிலுள்ள 4 விமானநிலையங்கள் ஊடாகப் பயணித்து, ஐந்தாவதாக ஒரு விமானநிலையத்தை அடைந்தோம். என்னுடன் என்னைப் போலவே சிலரும் பயணித்திருந்தார்கள்.

அது மத்தியகிழக்கு நாடுகளில் ஒரு முக்கியமான விமானநிலையம். அங்கு இறக்கப்பட்டு, அதன் பயணிகள் காத்திருக்குமிடத்தில் தங்கவைக்கப்பட்டோம். நம் பயணம், பணம் விளையாடும் தொழில் என்பதால், எமக்குக் கெடுபிடிகள் என்றெதுவும் இருக்கவில்லை. அங்கே காத்திருக்கும் இடத்தில், எம் போன்றே எமக்கு முன்னர் வந்த சிலரும் பல நாட்களாகக் காத்திருந்தார்கள். அவர்களின் காத்திருப்பு, என் பயணத்தின் நீட்சியைக் குறிப்பாலும் எனக்கு உணர்த்தவில்லை என்பதுதான், வெளிநாட்டு மோகத்தின் முழுமையான மன ஆக்கிரமிப்பு.  நாமும் அவர்களோடு இணைந்து காத்திருந்தது இன்னமும் 14 நாட்கள்…

காத்திருந்த அந்த விமானநிலையம், ‘ஷார்ஜா விமானநிலையம்'

விமானநிலையத்தை விட்டு வெளிச்செல்ல முடியாது. நேரத்திற்கு உண்ண அழைப்பார்கள். போய் உண்போம். வசதியான விசாலமான இருக்கைகளில் தொலைக்காட்சி பார்த்தபடியும், வருவோர் போவோரைப் பார்த்தபடியும், விமானநிலையத்துக் காட்சியறைகளைப் பார்த்தபடியும், நித்திரையிலும், காலம் கழிந்து கொண்டிருந்தது.

11 நாட்கள் முடிவில், முகவர்கள் எமக்கு முன்னரே வந்து காத்திருந்தவர்களை விமானமேற்றி அடுத்துச் செல்லவேண்டிய இடத்திற்கு அனுப்பிவைத்தார்கள். அடுத்த மூன்று நாட்களில் (மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் நாம் செல்ல வேண்டிய அந்த இடத்திற்கு விமானம் உண்டு) எம்மையும் அனுப்பிவைப்பதாகச் சொன்னார்கள். 

எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...

பசுமை நாடிய பயணங்கள்..! 02

2 comments:

  1. Yes, விரைவாக தொடருங்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. உங்களோடு நானும் பயணத்தில் பின் தொடருகின்றேன்'

    ReplyDelete