14 September 2021

பசுமை நாடிய பயணங்கள்..! 02

எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...

01

பிஸ்கெக், கிர்கிஸ்தான்!

Bishkek, Kyrgyztan!

பிளவுபட்ட ரஷ்யக் குடியரசின் நாடுகளில் ஒன்றான 'கிர்கிஸ்தான்' நாட்டின், தலைநகரம்தான் 'பிஸ்கெக்' நகரம். எங்களது தலைவிதியை நீண்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டதால், எமக்கும் மிக முக்கிய தலைவிதிநகரம் ஆகிப்போனது. 

சொன்னதுபோலவே முகவர்கள், அடுத்த கட்டமாக எங்களை அங்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, எமக்குரிய அறிவுறுத்தல்களையும் தந்தேவிட்டார்கள். என்னே! ஒரு வாக்கு நாணயம்; தொழில்நேர்த்தி. ஆனால், ‘நம்பாதீர்க்ள்; இது மட்டும்தான்’ என அங்கு ஏதாவது அசரீரி முனகியாவது இருந்திருக்கலாம். வியப்பில் இதுவரைக் காத்திருந்த நாட்கள் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால், அந்த விமானம் ஏறும் கணத்திலிருந்து, ஐரோப்பாவை அடையப்  பயணிக்கப் போகும் காலம் முழுதும், கொஞ்சம் கூட நம் கட்டுப்பாட்டுக்குள் நாம் இல்லை என்பதுதான், நம்மால் அன்று புரியப்படாத உண்மை.

நாம் அங்கு செல்லவதற்காக, விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வுப் பகுதிக்குச் செல்லத் தயாராகிக் காத்திருந்த வேளையில், மூன்று நாட்களுக்கு முன்னர் பயணித்தவர்களில் ஒருவர் அங்கிருந்து திரும்பி, எம்மை நோக்கி வந்து கொண்டிருந்தார். உடனே நாம் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டோம். அவர் சொன்னார், தான் முன்னரே ரஷ்யா (மொஸ்கோ) சென்று பிடிபட்டு மீளவும் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதால், மீண்டும் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, மூன்று நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு, அடுத்த விமானத்தில் ஏற்றித் திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்று...
முதன்முதலாக ஒரு தடங்கல் உறுத்தியது.

உறுத்தியது என்னைத் தடுத்திருந்தால், என் வாழ்க்கை வேறு பாதையில் பயணித்து இருந்திருக்கலாம். 

"தீர்மானிக்கப்பட்ட வாழக்கைதான் நாம் வாழ்வது"

சிறையின் வாசம் தெரியாத எனக்கு, ரஷ்ய சிறையின் கொடுமை சமிக்ஞை தந்தது. ஒருவேளை உணவு மட்டுமே தந்ததாகக் கூறினார். அவரிடம் இருந்த பணம் முழுவதையும் பறித்துவிட்டு வெறுமனே திருப்பி அனுப்பியிருந்தனர்.

எமக்கு இன்னமும் நேரம் இருந்தது. சில நாள் பசி, எப்போதும் களையான அவரது முகத்தில், களைப்பாகத் தெரிந்தது. ஒரு அவசர உணவை, அவசரமாக வாங்கி வந்து அவரிடம் கொடுத்துவிட்டு, என்னிடமிருந்த பணத்தில் மிகச் சொற்ப தொகையை (அதிகம் கொடுக்கும் அளவு என்னிடம் இருக்கவும் இல்லை) அவரிடம் கொடுத்து அவரது நிலையை நொந்தபடியே எனது பயணத்திற்காகத் தயாரானேன். 

ஆனால் விதி.., என்னைப் பார்த்து நொந்துகொண்டது...

நாம் மற்றனைவரும் உரிய பரிசோதனைகளை முடித்ததுமே, ஐரோப்பாவை அடைந்துவிட்ட கனவுடன் விமானம் ஏறினோம்.
நாம்   இதுவரை பயணித்தவைகள்தான்  விமானங்கள். இதை  விமானம் என்று சொல்ல முடியாத, எப்படிச் சொல்வது என்றே தீர்மானிக்கவியலாத, பறந்ததால் மட்டுமே ஒரு விமானம்.
விமானம் வானேறிப், பறந்து செல்ல, நம் 'காலம் தின்னி' ஒன்றும் 
அதனுடன் சேர்ந்தெழுந்து பறந்து கொண்டிருந்ததது, எம்மால் உணரப்படவேயில்லை. பயணிகள் விமானம் என்ற பெயரில், பயணிக்க தகுதியற்ற ஒரு விமானத்தில் நாம் பயணித்தோம். வேறு வெள்ளையினத்தவரும் பயணித்திருந்தார்கள்.

விமானம், இறங்கும் நேரத்தில், விமானப் பணியாளர்கள் பின்பக்கமாக ஓடி வந்தார்கள் (நான் பின்வரிசையில்தான் அமர்ந்திருந்தேன்). எங்கே போகின்றார்கள் என்று பார்த்தால், அவர்கள் ஓடிச் சென்று பின்வரிசையில் அடுக்கப்பட்டிருந்த பயணப்பொதிகளை (அப்போதுதான் எனக்குத் தெரியும் பயணப் பொதிகள் வைக்கத் தனிப்பகுதி இல்லை என்று) கைகோர்த்து, விமானம் இறங்கும்போது முன்விழாமல் தடுத்துப் பிடித்தபடி இருந்தார்கள். (இப்பொழுது புரிந்திருக்குமே ஏன் விமானம் என்று சொல்லமுடியாது என்று நான் கூறியதன் அர்த்தம்)

இப்படியான ஒரு விமானம், எப்படி ஒரு சர்வதேச தரம் கொண்ட விமான நிலையத்திலிருந்து அனுமதிக்கப்பட்டது என்பது, இன்றுவரை எனக்குப் புரியாத ஒரு புதிர்.

ஒரு வழியாக விமானம் தரையிறங்கிக் கொண்டது. செப்டம்பர் மாதத்தின் இறுதி நாட்களாகையால், வெளிச்சென்றதுமே கடும் ஊசிக் குளிரை உணர்ந்தோம்.
என் வாழ்வின் முதல் உண்மைக் குளிர் ஸ்பரிசம்.
விமான நிலையப் பேருந்தில் ஏறி, குளிரில் உதறி நடுங்கியபடி, விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையம் என்ற பெயரில் ஒரு கட்டிடம். எமக்கு ஏற்கனவேச் சொல்லியிருந்தபடி, அந்த நாட்டவர் ஒருவர் எம்மை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். (எங்கும் பணம் விளையாடியது, அவர் விமான நிலையத்தின் இருக்கைகளின் மீதாக ஏறியிறங்கி  வந்ததிலிருந்து தெளிவாகியது). அதிகாரிகள் எமது கடவுப்புத்தகங்களை வாங்கிப், பரிசோதித்த பின்னர் எம்மை வெளியே செல்ல அனுமதித்தனர்.

வெளியே வந்ததும், எமக்கெனக் காத்திருந்த வாகனங்களில், ஒரு யுத்தகால நடைமுறை வேகத்தில், எம்மையும் திணித்து, எமது பயணப் பொதிகளையும் திணித்துப் புறப்பட்டார்கள் வாகன ஓட்டிகள். எனக்குச் சாரதிக்குப் பக்கத்து இருக்கை கிடைத்தது. தாயகத்தில் வாகனங்கள் செல்லும் பக்கத்திற்கு மறுபக்கமாக நாம் பயணித்த வாகனங்கள் சென்றமையால், மனதுக்குள் ஏதோ அந்தரம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், சாளரத்தின் வெளியே கண்களை ஓட்டினேன். வாகனத்தின் உள்ளே அதன் வெப்பமாக்கி வேலை செய்ததால், உடலில் ஏறியிருந்த குளிர் விலக, ஐரோப்பா வந்துவிடாதோ என்ற நப்பாசையுடன் கண்களை விரித்து விடுப்புப் பார்த்தபடி பயணித்தேன். சாரதி ஏதேதோ தன்போக்கில் சொல்லியபடி வந்தான் (பின்னாளில் தெரிந்து கொண்டதன்படி அவையெல்லாம் அவர்கள் மொழியின் கெட்டவார்த்தைகள்). அவர்களின் பேச்சு மொழி ருஷ்கி. எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாட முற்பட்டேன். அது அவனுக்கு விளங்கவில்லை. நாமோ ருஷ்கி என்பதை அறிந்ததேயில்லை. எனவே, என்னுடன், நான் பயணித்த மகிழுந்தில் இருந்த நான்கு தாயக உறவுகளும் மௌனமொழியால் பேசியபடி, கண்களில் எதிர்பார்ப்பைத் தாங்கியபடி பயணித்தோம்.

அந்த நேரத்தின் இருளைக் கிழித்தபடி, நகரத்தினுள் நுழைந்து, அதன் தெருக்களில் வழுக்கியபடி பயணித்த வாகனம், எங்கோ சற்றே புறநகர்ப்பகுதியை அடைந்து, அங்கே ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தின் முன் நின்றபோது, நேரம் அதிகாலை (ரஷ்ய நேரம்) மூன்று மணி இருக்கும்.

அங்கே எம்மை வரவேற்றது...

பசுமை நாடிய பயணங்கள்..! 03

1 comment:

  1. நினைவின் உணர்வலைகள்.......❤️

    ReplyDelete